திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் |
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும். |
தனியன்கள் |
பெரிய நம்பிகள் அருளிச்செய்தது |
ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம்
மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருமதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோநிஸ்சிகாயமநவைமுநிவாஹநந்தம்.
|
திருமலை நம்பிகள் அருளிச் செய்தது |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
|
காட்டவே கண்ட பாத
கமலம்நல் லாடை யுந்தி,
தேட்டரு முதர பந்தம்
திருமார்பு கண்டம் செவ்வாய்,
வாட்டமில் கண்கள் மேனி
முனியேறித் தனிபு குந்து,
பாட்டினால் கண்டு வாழும்
பாணர்தாள் பரவி னோமே.
|
அமலனாதிபிரான் |
ஆசிரியத் துறை |
927
அமல னாதிபிரா னடியார்க்
கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர் கோன்விரை
யார்பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதிவானவன்
நீள்மதி ளரங்கத் தம்மான், திருக்
கமல பாதம்வந் தென்கண்ணி
னுள்ளன வொக்கின்றதே.#
|
1 |
928
உவந்த வுள்ளத்தனா யுலக
மளந் தண்டமுற,
நிவந்த நீள்முடியன் அன்று
நேர்ந்த நிசாசரரை,
கவர்ந்தவெங்கணைக் காகுத்தன் கடியார்
பொழில்அரங்கத் தம்மான்,அரைச்
சிவந்த ஆடையின் மேல்சென்ற
தாமென் சிந்தனையே.
|
2 |
929
மந்தி பாய்வட வேங்கட
மாமலை, வானவர்கள்,
சந்தி செய்யநின்றா னரங்கத்
தரவி னணையான்,
அந்தி போல்நிறத்தாடையு மதன்மேல்
அயனைப் படைத்ததோரெழில்
உந்தி மேலதன் றோஅடி
யேனுள்ளத் தின்னுயிரே.# |
3 |
930
சதுரமா மதிள்சூ ழிலங்கைக்
கிறைவன் தலைபத்து
உதிர வோட்டி,ஓர் வெங்கணை
யுய்த்தவ னோத வண்ணன்,
மதுரமா வண்டுபாட மாமயிலாடரங்கத்
தம்மான், திருவயிற்
றுதர பந்தன மென்
னுள்ளத்துள்நின் றுலாகின்றதே. |
4 |
931
பாரமாய பழவினை பற்ற
றுத்து, என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி
யென்னுள் புகுந்தான்,
கோர மாதவம்செய்த னன்கொலறியே
னரங்கத் தம்மான், திரு
வார மார்பதன் றோஅடி
யேனை யாட்கொண்டதே. |
5 |
932
துண்ட வெண்பிறை யான்துயர்
தீர்த்தவன், அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர்
மேய வப்பன்
அண்ட ரண்டபதிரண்டத் தொருமாநிலம்
எழுமால்வரை, முற்றும்
உண்ட கண்டங்கண் டீரடி
யேனை யுய்யக்கொண்டதே. |
6 |
933
கையி னார்சுரி சங்கன
லாழியர், நீள்வரைபோல்
மெய்யனார் துளப விரையார்
கமழ்நீள் முடியெம்
ஐயனார், அணியரங்கனா ரரவி
னணைமிசை மேமாயனார்,
செய்யவா யையோ! என்னைச்
சிந்தை கவர்ந்ததுவே.! |
7 |
934
பரிய னாகிவந்த அவுண
னுடல்கீண்ட, அமரர்க்கு
அரிய ஆதிபிரா னரங்கத்
தமலன் முகத்து,
கரிய வாகிப்புடை பரந்துமிளிர்ந்து
செவ்வரி யோடி,நீண்டவப்
பெரிய வாயகண்க ளென்னைப்
பேதைமை செய்தனவே.! |
8 |
935
ஆலமா மரத்தி னிலைமே
லொரு பாலகனாய்,
ஞால மேழு முண்டா
னரங்கத்தரவி னணையான்,
கோல மாமணியாரமும் முத்துத்தாமமும்
முடிவில்ல தோரெழில்
நீல மேனி யையோ!நிறை
கொண்டதென் நெஞ்சினையே!# |
9 |
936
கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை,
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்,மற் றொன்றினைக் காணவே.# |
10 |
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் |