பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா |
ஒன்பதாம் திருமுறை |
2. கோயில் |
பண் - சாளரபாணி |
185
முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல்
தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப்
எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே. |
1 |
186
கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன்
அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதே
முடியாமுத் தீவேள்வி முவாயி ரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக் கூத் தாடினையே. |
2 |
187
அல்லியம் பூம்பழனத்(து) ஆமூர்நா வுக்கரசைச்
செல்ல நெறிவகுத்த சேவகனே! தென்தில்லைக்
கொல்லை விடையேறி கூத்தா(டு) அரங்காகச்
செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே. |
3 |
188
எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்(டு) எமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் தன்னையும் ஆட் கொண்டருளி
அம்பந்து கண்ணாளும் தானும் அணிதில்லைச்
செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே. |
4 |
189
களையா உடலோடு சேரமான் ஆருரன்
விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள
முளையா மதிசூடி மூவா யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே. |
5 |
190
அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதே
புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்க்
சிவலோகம் ஆவதுவும் தில்லைச் சிற் றம்பலமே. |
6 |
191
களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல்
அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப
ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும்
தெளிகொண்ட தில்லைச் சிற் றம்பலமே சேர்ந்தனையே. |
7 |
192
பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்
சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில்
நாடகத்தின் கூத்தை நயிற்றுமலர் நாடோறும்
ஆடகத்தால் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே. |
8 |
193
உருவத்(து) எரியுருவாய் ஊழிதோ றெத்தனையும்
பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த
இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்(து)
அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே. |
9 |
194
சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்தன்
ஆடல் அதியசத்தை ஆங்கறித்து பூந்துருத்திக்
காடன் தமிழ் மாலை பத்தும் கருத்தறிந்து
பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே. |
10 |
திருச்சிற்றம்பலம் |