மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் |
34. உயிருண்ணிப்பத்து |
திருப்பெருந்துறையில் அருளியது |
சிவானந்த மேலிடுதல் |
கலிவிருத்தம் |
பைந்நாப்பட அரவேரல்குல்
உமைபாகம தாய்என்
மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக்
கேடாவிடைப் பாகா
செந்நாவலர் பரசும்புகழ்த்
திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாள்களித் தெந்நாள்இறு
மாக்கேன் இனியானே. |
1 |
நானாரடி யணைவானொரு
நாய்க்குத் தவிசிட்டிங்கு
ஊனாருடல் புகுந்தான்உயிர்
கலந்தான்உளம் பிரியான்
தேனார்சடை முடியான்மன்னு
திருப்பெருந்துறை உறைவான்
வானோர்களும் அறியாததோர்
வளம்ஈந்தனன் எனக்கே. |
2 |
எனைநானென்ப தறியேன்பகல்
இரவாவதும் அறியேன்
மனவாசகங் கடந்தான்எனை
மத்தோன்மத்த னாக்கிச்
சினமால்விடை உடையான்மன்னு
திருப்பெருந்துறை உறையும்
பனவன்எனைச் செய்தபடி
றறியேன் பரஞ்சுடரே. |
3 |
வினைக்கேடரும் உளரோபிறர்
சொல்லீர்விய னுலகில்
எனைத்தான்புகுந் தாண்டான்என்
தென்பின்புரை யுருக்கிப்
பினைத்தான்புகுந் தெல்லேபெருந்
துறையில்உறை பெம்மான்
மனத்தான் கண்ணின்
அகத்தான்மறு மாற்றத் திடையானே. |
4 |
பற்றாங்கவை அற்றீர்பற்றும்
பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அடைவோமெனிற்
கெடுவீரோடி வம்மின்
தெற்றார்சடை முடியான்மன்னு
திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கவன் கழல்பேணின்
ரொடுங்கூடுமின் கலந்தே. |
5 |
கடலின்திரை யதுபோல்வரு
கலக்கம்மலம் அறுத்தென்
உடலும்என துயிரும்புகுந்
தொழியாவண்ணம் நிறைந்தான்
சுடருஞ்சுடர் மதிசூடிய
திருப்பெருந்துறை உறையும்
படருஞ்சடை மகுடத்தெங்கள்
பரன்தான் செய்தபடிறே. |
6 |
வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம்
வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம்
வேண்டார் தமை நாளுந்
தீண்டேன்சென்று சேர்ந்தேன் மன்னு
திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன்இனிப்
புறம்போகலொட் டேனே. |
7 |
கோற்றேன்எனக் கென்கோகுரை
கடல்வாய்அமு தென்கோ
ஆற்றேன்எங்கள் அரனேஅரு
மருந்தேஎன தரசே
சேற்றார்வயல் புடைசூழ்தரு
திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனிநின்
மலனேஉனை யானே. |
8 |
எச்சம்அறி வேன்நான்எனக்
கிருக்கின்றதை அறியேன்
அச்சோஎங்கள் அரனேஅரு
மருந்தேஎன தமுதே
செச்சைமலர் புரைமேனியன்
திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம்என நெஞ்சில்மன்னி
யானாகிநின் றானே. |
9 |
வான்பாவிய உலகத்தவர்
தவமேசெய அவமே
ஊன்பாவிய உடலைச்சுமந்
தடவிமர மானேன்
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு
திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியன் ஆனால்உனை
நல்காயென லாமே. |
10 |
திருச்சிற்றம்பலம் |