மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் |
43. திருவார்த்தை |
திருப்பெருந்துறையில் அருளியது |
அறிவித்தன்புறுதல் |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
மாதிவர் பாகன் மறைபயின்ற
வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கரு ணையடியார் குலாவு
நீதிகுண மாக நல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த
அருளறிவார் எம்பிரா னாவாரே. |
1 |
மாலயன் வானவர் கோனும் வந்து
வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம் அதனிடை வந்திழிந்து
நன்னெறி காட்டி நலம்திகழுங்
கோல மணியணி மாடநீடு
குலாவு மிடைவை மடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந்
திறமறிவார் எம்பிரா னாவாரே. |
2 |
அணிமுடி ஆதி அமரர்கோமான்
ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப்
பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெட நல்கும் பெருந்துறையெம்
பேரரு ளாளன்பெண் பாலுகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும்
வகையறிவார் எம்பிரா னாவாரே. |
3 |
வேடுரு வாகி மகேந்திரத்து
மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான்
சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி
ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடல் களையெங்கும் ஆண்டுகொண்ட
இயல்பறிவார் எம்பிரா னாவாரே. |
4 |
வந்திமை யோர்கள் வணங்கியேத்த
மாக்கரு ணைக்கட லாய்அடியார்
பந்தனை விண்டற நல்கும்எங்கள்
பரமன் பெருந்துறை ஆதிஅந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன்
றோங்கு மதிலிலங் கைஅதனிற்
பந்தணை மெல்விர லாட்கருளும்
பரிசறிவார் எம்பிரா னாவாரே. |
5 |
வேவத் திரிபுரம் செற்றவில்லி
வேடுவ னாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே
எம்பெரு மான்தான் இயங்குகாட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன்
எந்தை பெருந்துறை ஆதிஅன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த
கிடப்பறி வார்எம் பிரா னாவாரே. |
6 |
நாதம் உடையதோர் நற்கமலப்
போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த
ஒளிவளர் சோதியெம் ஈசன்மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல் லார்எம் பிரானாவாரே. |
7 |
பூவலர் கொன்றையம் மாலைமார்பன்
போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன்
வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன்
இருங்கடல் வாணற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும்
உருவறி வார்எம் பிரானாவாரே. |
8 |
தூவெள்ளை நீறணி எம்பெருமான்
சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன்
தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித்
தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளுங்
கிடப்பறி வார்எம் பிரானாவாரே. |
9 |
அங்கணன் எங்கள் அமரர்பெம்மான்
அடியார்க் கமுதன் அவனிவந்த
எங்கள் பிரான்இரும் பாசந்தீர
இகபர மாயதோர் இன்பமெய்தச்
சங்கங் கவர்ந்துவண் சாத்தினோடுஞ்
சதுரன் பெருந்துறை ஆளிஅன்று
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த
வகையறி வார்எம் பிரானாவாரே. |
10 |
திருச்சிற்றம்பலம் |