மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் |
11. திருத்தெள்ளம் |
தில்லையில் அருளியது |
சிவனோடு அடைவு |
தரவு கொச்சகக் கலிப்பா |
திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. |
1 |
திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. |
2 |
அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை
உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட் டுலகமெல்லாம்
சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ. |
3 |
அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே
பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. |
4 |
அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம்
உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக்
கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த
திருவந்த வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. |
5 |
அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின்மேல்
வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம்
உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில்நீர்த்
திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. |
6 |
ஆவா அரிஅயன்இந் திரன்வானோர்க் கரியசிவன்
வாவாவென் றென்னையும் பூதலத்தே வலித்தாண்டு கொண்டான்
பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே
தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. |
7 |
கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும்
அறம்பாவமென் றிரண்டச்சந் தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான்
மறந்தேயுந் தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கியஅத்
திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. |
8 |
கல்நா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால்
பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி
மின்னேர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர்
தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. |
9 |
கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்
புனவே யனவளைத் தோளியொடும் புகுந்தருளி
நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம்
சினவேற்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. |
10 |
கயல்மாண்ட கண்ணிதன்பங்கன் எனைக்கலந் தாண்டலுமே
அயல்மாண் டருவினைச் சுற்றமுமாண் டவனியின்மேல்
மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண் டென்னுடைய
செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. |
11 |
முத்திக் குழன்று முனிவர்குழாம் நனிவாட
அத்திக் கருளி அடியேனை ஆண்டுகொண்டு
பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி
தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. |
12 |
பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. |
13 |
மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே
நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன்
பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தால்
சேலேர்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. |
14 |
உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு
பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை
மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியோம்
திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. |
15 |
புத்தன் புரந்தராதியர் அயன்மால் போற்றிசெயும்
பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த
அத்தன் அணிதில்லை அம்பலவன் அருட்கழல்கள்
சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ. |
16 |
உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும்
கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும்
செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. |
17 |
வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினும்
தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு
ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டென் உள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. |
18 |
விண்ணோர் முழுமுதல் பாதாளத் தார்வித்து
மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம்
கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித்
தென்னாதென் னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. |
19 |
குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல்வளையாள்
நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. |
20 |
திருச்சிற்றம்பலம் |