மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
9. திருப்பொற்சுண்ணம்
கச்சித் திருவேகம்பத்தில் அருளியது
ஆனந்த மனோலயம்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
    முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
    நாமக ளோடுபல் லாண்டிசைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியுங்
    கங்கையும் வந்து கவரிகொண்மின்
அத்தன் ஐயாறன்அம் மானைப்பாடி
    ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
1
பூவியல் வார்சடை எம்பிராற்குப்
    பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும்
மாவின் வடுவகி ரன்னகண்ணீர்
    வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்
கூவுமின் தொண்டர் புறநிலாமே
    குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன்
தேவியுந் தானும்வந் தெம்மையாளச்
    செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே.
2
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
    தூயபொன் சிந்தி நிதிபரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
    எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர் கோன்அயன் தன்பெருமான்
    ஆழியான் நாதன்நல் வேலன் தாதை
எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்
    கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே.
3
காசணி மின்கள் உலக்கையெல்லாங்
    காம்பணி மின்கள் கறையுரலை
நேசமுடைய அடியவர்கள்
    நின்று நிலாவுக என்றுவாழ்த்தித்
தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித்
    திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப்
பாச வினையைப் பறித்துநின்று
    பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே.
4
அறுகெடுப் பார்அய னும்அரியும்
    அன்றிமற் றிந்திர னோடமரர்
நறுமுறு தேவர் கணங்களெல்லாம்
    நம்மின்பின் பல்ல தெடுக்கவொட்டோம்
செறிவுடை மும்மதில் எய்தவில்லி
    திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி
முறுவற்செவ் வாயனீர் முக்கணப்பற்கு
    ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
5
உலக்கை பலஓச்சு வார்பெரியர்
    உலகமெ லாம்உரல் போதாதென்றே
கலக்க அடியவர் வந்துநின்றார்
    காண உலகங்கள் போதாதென்றே
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
    நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி
    மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்துநாமே.
6
சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
    தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
    நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
பாடகம் மெல்லடி யார்க்குமங்கை
    பங்கினன் எங்கள் பராபரனுக்கு
ஆடக மாமலை அன்னகோவுக்கு
    ஆடப் பொற்சுண்ணம் இடித்துநாமே.
7
வாள்தடங் கண்மட மங்கைநல்லீர்
    வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத்
தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்
    சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி
நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி
    நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
    ஆடப் பொற்சுண்ணம் இடித்துநாமே.
8
வையகம் எல்லாம் உரலதாக
    மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறையஅட்டி
    மேதகு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப்பாடிச்
    செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
    ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
9
முத்தணி கொங்கைகள் ஆடஆட
    மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
    செங்கயற் கண்பனி ஆடஆடப்
பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
    பிறவி பிறரொடும் ஆடஆட
அத்தன் கருணையொ டாடஆட
    ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
10
மாடு நகைவாள் நிலாவெறிப்ப
    வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப்
பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
    பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித்
தேடுமின் எம்பெரு மானைத்தேடி
    சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி
ஆடுமின் அம்பலத் தாடினானுக்கு
    ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
11
மையமர் கண்டனை வானநாடர்
    மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை
ஐயனை ஐயர்பி ரானைநம்மை
    அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
    போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள்
பையர வல்குல் மடந்தைநல்லீர்
    பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
12
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
    வெண்நகைப் பண்ணமர் மென்மொழியீர்
என்னுடை ஆரமு தெங்களப்பன்
    எம்பெருமான்இம வான்மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
    தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
    பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே.
13
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
    தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்
செங்கனி வாயித ழுந்துடிப்ப
    சேயிழை யீர்சிவ லோகம்பாடிக்
கங்கை இரைப்ப அராஇரைக்குங்
    கற்றைச் சடைமுடி யான்கழற்கே
பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப்
    பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே.
14
ஞானக் கரும்பின் தெளியைப்பாகை
    நாடற் கரிய நலத்தைநந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயினானைச்
    சித்தம் புகுந்துதித் திக்கவல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
    கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்
பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
    பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
15
ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோடு
    ஆட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல்
தேவர் கனாவிலுங் கண்டறியாச்
    செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச்
சேவகம் ஏந்திய வெல்கொடியான்
    சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச்
சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
    செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே.
16
தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
    சிவபுரம் பாடித் திருச்சடைமேல்
வானக மாமதிப் பிள்ளைபாடி
    மால்விடை பாடி வலக்கையேந்தும்
ஊனக மாமழுச் சூலம்பாடி
    உம்பரும் இம்பரும் உய்யஅன்று
போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
    பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே.
17
அயன்தலை கொண்டுசெண் டாடல்பாடி
    அருக்கன் எயிறு பறித்தல்பாடிக்
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடிக்
    காலனைக் காலால் உதைத்தல்பாடி
இயைந்தன முப்புரம் எய்தல்பாடி
    ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
நயந்தனைப் பாடிநின் றாடியாடி
    நாதற்குச் சுண்ணம் இடித்துநாமே.
18
வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி
    மத்தமும் பாடி மதியும்பாடிச்
சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
    சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக்
கட்டிய மாசுணக் கச்சைபாடிக்
    கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல்
இட்டுநின் றாடும் அரவம்பாடி
    ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே.
19
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
    மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
சோதியு மாய்இருள் ஆயினார்க்குத்
    துன்பமு மாய்இன்பம் ஆயினார்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப்
    பந்தமு மாய்வீடும் ஆயினாருக்கு
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு
    ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
20
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com