மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் |
1. சிவபுராணம் |
திருப்பெருந்துறையில் அருளியது சிவனது அநாதி முறைமையான பழமை |
தற்சிறப்புப் பாயிரம் |
கலிவெண்பா |
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழிஆண்ட குருமணி தன்தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க |
5 |
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க |
10 |
ஈ.சன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
நேசன் அடிபோற்றி சிவன் சேவடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறை நம்தேவன் அடிபோற்றி |
15 |
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவன்அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓயஉரைப்பன் யான் |
20 |
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்துஎய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றுஅறியேன் |
25 |
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாரவ சங்கமத்துள் |
30 |
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டுஇன்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயாஎன வோங்கி ஆழ்ந்துஅகன்ற நுண்ணியனே |
35 |
வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
பொய்ஆயின எல்லாம் போய்அகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே |
40 |
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனம்களிய நின்ற மறையோனே |
45 |
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்புஅறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர்ஐந்து உடையாய் விண்ணோர்கள்ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை |
50 |
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்துஎங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப்புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய |
55 |
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள்உருகும்
நலம் தான்இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள்காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் |
60 |
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றுஅறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேசஅருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப் |
65 |
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே |
70 |
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈ.ர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுஉணர்வார் தம்கருத்தில் |
75 |
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்உணர்வே
போக்கும் வரவும் புணர்வும்இலாப் புண்ணியனே
காக்கும் என்காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய் சொல்லாத நுண்உணர்வாய் |
80 |
மாற்றமாய் வையகத்தின் வெவ்வேறே வந்துஅறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குஉடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம்ஐயா அரனேஓ என்றுஎன்று |
85 |
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டுஅழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே |
90 |
அல்லல் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. |
95 |
திருச்சிற்றம்பலம் |