மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் |
22. கோயில் திருப்பதிகம் |
திருப்பெருந்துறையை நினைந்து தில்லையில் அருளியது என்பர் |
அநுபோக இலக்கணம் |
எழுசீர் ஆசிரிய விருத்தம் |
மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந் தருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடை அன்பே. |
1 |
அன்பினா லடியே னாவியோ டாக்கை
யானந்த மாய்க்கசிந் துருக
என்பர மல்லா இன்னருள் தந்தாய்
யானிதற் கிலனொர் கைம்மாறு
முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
சீருடைச் சிவபுரத் தரைசே. |
2 |
அரைசனே அன்பர்க் கடியனே னுடைய
அப்பனே ஆவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்
பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே
திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே
உரையுணர்வு இறந்துநின் றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. |
3 |
உணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார்
உணர்வுக்குந் தெரிவரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
எனைப்பிறப் பறுக்கும்எம் மருந்தே
திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
திருப்பெருந் துறையுறை சிவனே
குணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக்
குறுகினேற் கினியென்ன குறையே. |
4 |
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை யென்னிரக் கேனே. |
5 |
இரந்திரந் துருக என்மனத் துள்ளே
எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
திருப்பெருந் துறையுறை
நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆயவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண் டின்றே. |
6 |
இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே. |
7 |
பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாருற வெனக்கிங் காரய லுள்ளார்
ஆனந்தம் ஆக்குமென் சோதி. |
8 |
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தம் பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே. |
9 |
தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான்இதற் கிலன்ஓர்கைம் மாறே. |
10 |
திருச்சிற்றம்பலம் |