மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் |
31. கண்டபத்து |
தில்லையில் அருளியது |
நிருத்த தரிசனம் |
தரவு கொச்சகக் கலிப்பா |
இந்திரிய வயமயங்கி
இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய்
அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச்
சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம்
அணிகொள்தில்லை கண்டேனே. |
1 |
வினைப்பிறவி என்கின்ற
வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே
தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென்
பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகுந் தொழுந்தில்லை
அம்பலத்தே கண்டேனே. |
2 |
உருத்தெரியாக் காலத்தே
உள்புகுந்தென் உளமன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக்
கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத்
தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன்
அணிகொள்தில்லை கண்டேனே. |
3 |
கல்லாத புல்லறிவிற்
கடைப்பட்ட நாயேனை
வல்லாள னாய்வந்து
வனப்பெய்தி யிருக்கும்வண்ணம்
பல்லோருங் காணஎன்றன்
பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை
அம்பலத்தே கண்டேனே. |
4 |
சாதிகுலம் பிறப்பென்னுஞ்
சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை
அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம்
யானெனதென் னுரைமாய்த்துக்
கோதிலமு தானானைக்
குலாவுதில்லை கண்டேனே. |
5 |
பிறவிதனை அறமாற்றிப்
பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென்
றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த்
திருச்சிற்றம் பலம்மன்னி
மறையவரும் வானவரும்
வணங்கிடநான் கண்டேனே. |
6 |
பத்திமையும் பரிசுமிலாப்
பசுபாசம் அறுத்தருளிப்
பித்தனிவன் எனஎன்னை
ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால்
திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல்
விளங்குதில்லை கண்டேனே. |
7 |
அளவிலாப் பாவகத்தால்
அமுக்குண்டிங் கறிவின்றி
விளைவொன்றும் அறியாதே
வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு
அளவிலா ஆனந்தம்
அளித்தென்னை ஆண்டானைக்
களவிலா வானவருந்
தொழுந்தில்லை கண்டேனே. |
8 |
பாங்கினொடு பரிசொன்றும்
அறியாத நாயேனை
ஓங்கியுளத் தொளிவளர
உலப்பிலா அன்பருளி
வாங்கிவினை மலம்அறுத்து
வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை
அம்பலத்தே கண்டேனே. |
9 |
பூதங்கள் ஐந்தாகிப்
புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப்
பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட
கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும்
விளங்குதில்லை கண்டேனே. |
10 |
திருச்சிற்றம்பலம் |