மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் |
44. எண்ணப்பதிகம் |
தில்லையில் அருளியது |
ஒழியா இன்பத்து உவகை |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
பாருரு வாய பிறப்பற வேண்டும்
பத்திமை யும்பெற வேண்டுஞ்
சீருரு வாய சிவபெரு மானே
செங்க மலம லர்போல்
ஆருரு வாய என்னா ரமுதே
உன்அடி யவர்தொகை நடுவே
ஓருரு வாயநின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக்கொண் டருளே. |
1 |
உரியேன் அல்லேன் உனக்கடிமை
உன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேன் நாயேன் இன்னதென்
றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒரவன் கண்டுகொள்
என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
பொய்யோ எங்கள் பெருமானே. |
2 |
என்பே உருக நின்அருள்
அளித்துன் இணைமலர் அடிகாட்டி
முன்னே என்னை ஆண்டு
கொண்ட முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி
உயிருண் கின்ற எம்மானே
நண்பே யருளாய் என்னுயிர்
நாதா நின்னருள் நாணாமே. |
3 |
பத்தில னேனும் பணிந்தில
னேனும்உன் உயர்ந்தபைங் கழல்காணப்
பித்தல னேனும் பிதற்றில னேனும்
பிறப்பறுப் பாய்எம் பெருமானே
முத்தனை யானே மணியனை
யானே முதல்வனே முறையோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந்
துன்னை இனிப்பிரிந் தாற்றேனே. |
4 |
காணும தொழிந்தேன் நின்திருப்
பாதங் கண்டுகண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும
தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந்
துருகுந் தன்மைஎன் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினி
வரினுங் காணவும் நாணுவனே. |
5 |
பால்திரு நீற்றெம் பரமனைப்
பரங்கரு ணையோடும் எதிர்ந்து
தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை
யளிக்குஞ் சோதியை நீதியிலேன்
போற்றியென் அமுதே எனநினைந் தேத்திப்
புகழ்ந்ததைத் தலறியென் னுள்ளே
ஆற்றுவ னாக உடையவ
னேஎனை ஆவஎன் றருளாயே. |
6 |
திருச்சிற்றம்பலம் |