மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் |
29. அருட்பத்து |
திருப்பெருந்துறையில் அருளியது |
மகா மாயாசுத்தி |
எழுசீர் ஆசிரிய விருத்தம் |
சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பனைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
பங்கயத் தயனுமா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. |
1 |
நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி
உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. |
2 |
எங்கள் நாயகனே என்னுயிர்த் தலைவா
ஏலவார் குழலிமார் இருவர்
தங்கள்நா யகனே தக்கநற் காமன்
தனதுடல் தழலெழ விழித்த
செங்கண்நா யகனே திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. |
3 |
கமலநான் முகனுங் கார்முகில் நிறத்துக்
கண்ணனும் நண்ணுதற் கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. |
4 |
துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
துணைமுலைக் கண்கள்தோள் சுவடு
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு
பொங்கொளி தங்குமார் பினனே
செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. |
5 |
துப்பனே தூயாய் தூயவெண் ணீறு
துதைந்தெழு துளங்கொளி வயிரத்து
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில்
உறுசுவை யளிக்கும் ஆரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. |
6 |
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
மேவலர் புரங்கள்மூன் றெரித்த
கையனே காலாற் காலனைக் காய்ந்த
கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. |
7 |
முத்தனே முதல்வா முக்கணா முனிவா
மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரகதி கொடுத்தருள் செய்யும்
சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. |
8 |
மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
மறுமையோ டிம்மையுங் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா ளரவங்
கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. |
9 |
திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்
டென்னுடை யெம்பிரான் என்றென்று
அருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
போதராய் என்றரு ளாயே. |
10 |
திருச்சிற்றம்பலம் |