திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.90 திருவேதிகுடி - திருவிருத்தம்
கையது காலெரி நாகங்
    கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட
    விரிசடை விண்ணவர்கோன்
செய்யினில் நீல மணங்கம
    ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை
    நாமடைந் தாடுதுமே.
1
கைத்தலை மான்மறி யேந்திய
    கையன் கனல்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி
    யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக
    ளுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை
    நாமடைந் தாடுதுமே.
2
முன்பின் முதல்வன் முனிவனெம்
    மேலை வினைகழித்தான்
அன்பின் நிலையில் அவுணர்
    புரம்பொடி யானசெய்யுஞ்
செம்பொனை நன்மலர் மேலவன்
    சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை
    நாமடைந் தாடுதுமே.
3
பத்தர்கள் நாளும் மறவார்
    பிறவியை யொன்றறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து
    பாரிடம் முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம
    ழுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை
    நாமடைந் தாடுதுமே.
4
ஆனணைந் தேறுங் குறிகுண
    மாரறி வாரவர்கை
மானணைந் தாடு மதியும்
    புனலுஞ் சடைமுடியன்
தேனணைந் தாடிய வண்டு
    பயில்திரு வேதிகுடி
ஆனணைந் தாடு மழுவனை
    நாமடைந் தாடுதுமே.
5
எண்ணும் எழுத்துங் குறியும்
    அறிபவர் தாமொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய
    வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும்
    பிரான்திரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை
    நாமடைந் தாடுதுமே.
6
ஊர்ந்த விடையுகந் தேறிய
    செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையோர்
    பாகம் மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப்
    பிரான்றிரு வேதிகுடிச்
சார்ந்த வலயணி தண்ணமு
    தையடைந் தாடுதுமே.
7
எரியும் மழுவினன் எண்ணியும்
    மற்றொரு வன்றலையுள்
திரியும் பலியினன் தேயமும்
    நாடுமெல் லாமுடையான்
விரியும் பொழிலணி சேறு
    திகழ்திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்க
    ளோடடைந் தாடுதுமே.
8
மையணி கண்டன் மறைவிரி
    நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய
    வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கம
    ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை
    நாமடைந் தாடுதுமே.
9
வருத்தனை வாளரக் கன்முடி
    தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா அருளனைப்
    பூதப் படையுடைய
திருத்தனைத் தேவர் பிரான்றிரு
    வேதி குடியுடைய
அருத்தனை ஆரா அமுதினை
    நாமடைந் தாடுதுமே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com