திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.95 திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்
ஈன்றாளு மாயெனக் கெந்தையு
    மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந்
    தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன்
    திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன்
    றன்னடி யோங்களுக்கே.
1
பற்றாய் நினைந்திடப் போதுநெஞ்
    சேயிந்தப் பாரைமுற்றுஞ்
சுற்றாய் அலைகடல் மூடினுங்
    கண்டேன் புகல்நமக்கு
உற்றான் உமையவட் கன்பன்
    திருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி
    னான்றன மொய்கழலே.
2
விடையான் விரும்பியென் னுள்ளத்
    திருந்தான் இனிநமக்கிங்
கடையா அவலம் அருவினை
    சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல
    பவர்பா திரிப்புலியூர்
உடையான் அடியார் அடியடி
    யோங்கட் கரியதுண்டே.
3
மாயமெல் லாமுற்ற விட்டிருள்
    நீங்க மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தா
    னவன்றன் திருவடிக்கே
தேயமெல் லாநின் றிறைஞ்சுந்
    திருப்பா திரிப்புலியூர்
மேயநல் லான்மலர்ப் பாதமென்
    சிந்தையுள் நின்றனவே.
4
வைத்த பொருள்நமக் காமென்று
    சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய
    நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா
    ரவர்பா திரிப்புலியூர்
அத்தன் அருள்பெற லாமோ
    அறிவிலா பேதைநெஞ்சே.
5
கருவாய்க் கிடந்துன் கழலே
    நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம்
    பயின்றேன் உனதருளாற்
திருவாய் பொலியச் சிவாய
    நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா
    திரிப்புலி யூரரனே.
6
எண்ணா தமரர் இரக்கப்
    பரவையுள் நஞ்சமுண்டாய்
திண்ணார் அசுரர் திரிபுரந்
    தீயெழச் செற்றவனே
பண்ணார்ந் தமைந்த பொருள்கள்
    பயில்பா திரிப்புலியூர்க்
கண்ணார் நுதலாய் கழல்நங்
    கருத்தில் உடையனவே.
7
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
    வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர
    வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள்
    செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை
    மேல்வைத்த தீவண்ணனே.
8
மண்பா தலம்புக்கு மால்கடல்
    மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட் டிருசுடர்
    வீழினும் அஞ்சல்நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோந்
    திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட்
    சுடரான் கழலிணையே.
9
திருந்தா அமணர்தந் தீநெறிப்
    பட்டுத் திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம்
    புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா அரக்கன் உடல்நெரித்
    தாய்பா திரிப்புலியூர்
இருந்தாய் அடியேன் இனிப்பிற
    வாமல்வந் தேன்றுகொள்ளே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com