திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
நான்காம் திருமுறை |
4.98 திருநல்லூர் - திருவிருத்தம் |
அட்டுமின் இப்பலி யென்றென்
றகங்கடை தோறும்வந்து
மட்டவி ழுங்குழ லார்வளை
கொள்ளும் வகையென்கொலோ
கொட்டிய பாணி யெடுத்திட்ட
பாதமுங் கோளரவும்
நட்டநின் றாடிய நாதர்நல்
லூரிடங் கொண்டவரே.
|
1 |
பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை
பெய்பலிக் கென்றுழல்வார்
நண்ணிட்டு வந்து மனைபுகுந்
தாரும்நல் லூரகத்தே
பண்ணிட்ட பாடலர் ஆடல
ராய்ப்பற்றி நோக்கிநின்று
கண்ணிட்டுப் போயிற்றுக் காரண
முண்டு கறைக்கண்டரே.
|
2 |
படவேர் அரவல்குல் பாவைநல்
லீர்பக லேயொருவர்
இடுவார் இடைப்பலி கொள்பவர்
போலவந் தில்புகுந்து
நடவார் அடிகள் நடம்பயின்
றாடிய கூத்தர்கொலோ
வடபாற் கயிலையுந் தென்பால்நல்
லூருந்தம் வாழ்பதியே.
|
3 |
செஞ்சுடர் சோதிப் பவளத்
திரள்திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டன்நல் லூருறை
நம்பனை நானொருகாற்
துஞ்சிடைக் கண்டு கனவின்
றலைத்தொழு தேற்கவன்றான்
நெஞ்சிடை நின்றக லான்பல
காலமும் நின்றனனே.
|
4 |
வெண்மதி சூடி விளங்கநின்
றானைவிண் ணோர்கள்தொழ
நண்ணில யத்தொடு பாட
லறாதநல் லூரகத்தே
திண்ணிலை யங்கொடு நின்றான்
திரிபுர மூன்றெரித்தான்
கண்ணுளும் நெஞ்சத் தகத்தும்
உளகழற் சேவடியே.
|
5 |
தேற்றப் படத்திரு நல்லூ
ரகத்தே சிவனிருந்தாற்
தோற்றப் படச்சென்று கண்டுகொள்
ளார்தொண்டர் துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற்
றேடிய ஆதரைப்போற்
காற்றிற் கெடுத்துல கெல்லாந்
திரிதர்வர் காண்பதற்கே.
|
6 |
நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ்
சூழ்ந்த நல்லூரகத்தே
கீட்கொண்ட கோவணங் காவென்று
சொல்லிக் கிறிபடத்தான்
வாட்கொண்ட நோக்கி மனைவியொ
டுமங்கோர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன்
றோவிவ் வகலிடமே.
|
7 |
அறைமல்கு பைங்கழ லார்ப்பநின்
றானணி யார்சடைமேல்
நறைமல்கு கொன்றையந் தாருடை
யானும்நல் லூரகத்தே
பறைமல்கு பாடலன் ஆடல
னாகிப் பரிசழித்தான்
பிறைமல்கு செஞ்சடை தாழநின்
றாடிய பிஞ்ஞகனே.
|
8 |
மன்னிய மாமறை யோர்மகிழ்ந்
தேத்த மருவியெங்குந்
துன்னிய தொண்டர்கள் இன்னிசை
பாடித் தொழுதுநல்லூர்க்
கன்னியர் தாமுங் கனவிடை
யுன்னிய காதலரை
அன்னியர் அற்றவர் அங்கண
னேயருள் நல்கென்பரே.
|
9 |
திருவமர் தாமரை சீர்வளர்
செங்கழு நீர்கொள்நெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ்
சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட
மலிமறை யோர்கள்நல்லூர்
உருவமர் பாகத் துமையவள்
பாகனை உள்குதுமே.
|
10 |
செல்லேர் கொடியன் சிவன்பெருங்
கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவும் மதில்சூழ்
இலங்கையர் காவலனைக்
கல்லார் முடியொடு தோளிறச்
செற்ற கழலடியான்
நல்லூ ரிருந்த பிரான்அல்ல
னோநம்மை ஆள்பவனே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |