திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
நான்காம் திருமுறை |
4.73 திருச்சேறை - திருநேரிசை |
பெருந்திரு இமவான் பெற்ற
பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் தவங்கள் செய்ய
மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பால்
அங்கொரு பாக மாகத்
திருந்திட வைத்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
|
1 |
ஓர்த்துள வாறு நோக்கி
உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய்யென் றெண்ணி
மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப்
பேர்த்தெனை ஆளாக் கொண்டு
பிறவிவான் பிணிக ளெல்லாந்
தீர்த்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
|
2 |
ஒன்றிய தவத்து மன்னி
உடையனாய் உலப்பில் காலம்
நின்றுதங் கழல்க ளேத்தும்
நீள்சிலை விசய னுக்கு
வென்றிகொள் வேட னாகி
விரும்பிவெங் கான கத்துச்
சென்றருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
|
3 |
அஞ்சையும் அடக்கி ஆற்ற
லுடையனாய் அநேக காலம்
வஞ்சமில் தவத்துள் நின்று
மன்னிய பகீர தற்கு
வெஞ்சின முகங்க ளாகி
விசையொடு பாயுங் கங்கைச்
செஞ்சடை யேற்றார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
|
4 |
நிறைந்தமா மணலைக் கூப்பி
நேசமோ டாவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
கறுத்தன் தாதை தாளை
எறிந்தமா ணிக்கப் போதே
எழில்கொள்சண் டீசன் என்னச்
சிறந்தபே றளித்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
|
5 |
விரித்தபல் கதிர்கொள் சூலம்
வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல காலப்
பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு
ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
|
6 |
சுற்றுமுன் இமையோர் நின்று
தொழுதுதூ மலர்கள் தூவி
மற்றெமை உயக்கொள் என்ன
மன்னுவான் புரங்கள் மூன்றும்
உற்றொரு நொடியின் முன்னம்
ஒள்ளழல் வாயின் வீழச்
செற்றருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
|
7 |
முந்தியிவ் வுலக மெல்லாம்
படைத்தவன் மாலி னோடும்
எந்தனி நாத னேயென்
றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை
அடிமுடி யறியா வண்ணஞ்
செந்தழ லானார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
|
8 |
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
9 |
ஒருவரும் நிக ரிலாத
ஒண்டிறல் அரக்கன் ஓடிப்
பெருவரை யெடுத்த திண்டோள்
பிறங்கிய முடிகள் இற்று
மருவியெம் பெருமா னென்ன
மலரடி மெள்ள வாங்கித்
திருவருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வ னாரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |