திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.8 சிவனெனுமோசை
பண் - பியந்தைக்காந்தாரம்
சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற்
    றிருநின்ற செம்மை யுளதே
அவனுமோ ரையமுண்ணி யதளாடை யாவ
    ததன்மேலொ ராட லரவங்
கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில்
    கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றிகண்டு மவனீர்மை கண்டு
    மகநேர்வர் தேவ ரவரே.
1
விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத
    விதியல்லர் விண்ணு நிலனுந்
திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர்
    தெளிநீரு மல்லர் தெரியில்
அரிதரு கண்ணியாளை ஒருபாக மாக
    அருள்கார ணத்தில் வருவார்
எரியர வாரமார்பர் இமையாரு மல்லர்
    இமைப்பாரு மல்லர் இவரே.
2
தேய்பொடி வெள்ளைபூசி யதன்மேலோர் திங்கள்
    திலகம் பதித்த நுதலர்
காய்கதிர் வேலைநீல ஒளிமா மிடற்றர்
    கரிகாடர் காலோர் கழலர்
வேயுட னாடுதோளி அவள்விம்ம வெய்ய
    மழுவீசி வேழவுரி போர்த்
தேயிவ ராடுமாறும் இவள்காணு மாறும்
    இதுதா னிவர்க்கோ ரியல்பே.
3
வளர்பொறி யாமைபுல்கி வளர்கோதை வைகி
    வடிதோலும் நூலும் வளரக்
கிளர்பொறி நாகமொன்று மிளிர்கின்ற மார்பர்
    கிளர்காடு நாடு மகிழ்வர்
நளிர்பொறி மஞ்ஞையன்ன தளிர்போன்ற சாய
    லவள்தோன்று வாய்மை பெருகிக்
குளிர்பொறி வண்டுபாடு குழலா லொருத்தி
    யுளள்போல் குலாவி யுடனே.
4
உறைவது காடுபோலு முரிதோ லுடுப்பர்
    விடையூர்வ தோடு கலனா
இறையிவர் வாழும்வண்ண மிதுவேலு மீச
    ரொருபா லிசைந்த தொருபால்
பிறைநுதல் பேதைமாதர் உமையென்னு நங்கை
    பிறழ்பாட நின்று பிணைவான்
அறைகழல் வண்டுபாடும் அடிநீழ லாணை
    கடவா தமர ருலகே.
5
கணிவளர் வேங்கையோடு கடிதிங்கள் கண்ணி
    கழல்கால் சிலம்ப அழகார்
அணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ண
    மியலா ரொருவ ரிருவர்
மணிகிளர் மஞ்ஞையால மழையாடு சோலை
    மலையான் மகட்கு மிறைவர்
அணிகிள ரன்னவண்ணம் அவள் வண்ணவண்ணம்
    அவர்வண்ண வண்ணம் அழலே.
6
நகைவலர் கொன்றைதுன்று நகுவெண் டலையர்
    நளிர்கங்கை தங்கு முடியர்
மிகைவளர் வேதகீத முறையோடும் வல்ல
    கறைகொள் மணிசெய் மிடறர்
முகைவளர் கோதைமாதர் முனிபாடு மாறு
    மெரியாடு மாறு மிவர்கைப்
பகைவளர் நாகம்வீசி மதியங்கு மாறு
    மிதுபோலும் ஈச ரியல்பே.
7
ஒளிவளர் கங்கைதங்கு மொளிமா லயன்ற
    னுடல்வெந்து வீய சுடர்நீ
றணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ணர்
    தமியா ரொருவ ரிருவர்
களிகிளர் வேடமுண்டோர் கடமா வுரித்த
    உடைதோல் தொடுத்த கலனார்
அணிகிள ரன்னதொல்லை யவள்பாக மாக
    எழில்வேத மோது மவரே.
8
மலைமட மங்கையோடும் வடகங்கை நங்கை
    மணவாள ராகி மகிழ்வர்
தலைகல னாகவுண்டு தனியே திரிந்து
    தவவாண ராகி முயல்வர்
விலையிலி சாந்தமென்று வெறிநீறு பூசி
    விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ளமுற்று மலறக் கடைந்த
    அழல்நஞ்ச முண்ட வவரே.
9
புதுவிரி பொன்செயோலை யொருகாதோர் காது
    சுரிசங்க நின்று புரள
விதிவிதி வேதகீத மொருபாடு மோத
    மொருபாடு மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றைதுன்று சடைபாக மாதர்
    குழல்பாக மாக வருவர்
இதுஇவர் வண்ணவண்ணம் இவள்வண்ண வண்ணம்
    எழில்வண்ண வண்ண மியல்பே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com