திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.61 திருஇராமேச்சுரம் - திருநேரிசை
பாசமுங் கழிக்க கில்லா
    அரக்கரைப் படுத்துத் தக்க
வாசமிக் கலர்கள் கொண்டு
    மதியினால் மால்செய் கோயில்
நேசமிக் கன்பி னாலே
    நினைமின்நீர் நின்று நாளுந்
தேசமிக் கான் இருந்த
    திருஇரா மேச்சு ரமே.
1
முற்றின நாள்கள் என்று
    முடிப்பதே கார ணமாய்
உற்றவன் போர்க ளாலே
    உயர்விலா அரக்கர் தம்மைச்
செற்றமால் செய்த கோயில்
    திருஇரா மேச்சு ரத்தைப்
பற்றிநீ பரவு நெஞ்சே
    படர்சடை ஈசன் பாரே.
2
கடலிடை மலைகள் தம்மால்
    அடைத்துமால் கருமம் முற்றித்
திடலிடைச் செய்த கோயில்
    திருஇரா மேச்சு ரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற்
    சுழல்கின்றேன் தூய்மை யின்றி
உடலிடை நின்றும் பேரா
    ஐவர்ஆட் டுண்டு நானே.
3
குன்றுபோல் தோளு டைய
    குணமிலா அரக்கர் தம்மைக்
கொன்றுபோ ராழி யம்மால்
    வேட்கையாற் செய்த கோயில்
நன்றுபோல் நெஞ்ச மேநீ
    நன்மையை அறிதி யாயிற்
சென்றுநீ தொழுதுய் கண்டாய்
    திருஇரா மேச்சு ரமே.
4
வீரமிக் கெயிறு காட்டி
    விண்ணுற நீண்ட ரக்கன்
கூரமிக் கவனைச் சென்று
    கொன்றுடன் கடற் படுத்துத்
தீரமிக் கானி ருந்த
    திருஇரா மேச்சு ரத்தைக்
கோரமிக் கார்த வத்தாற்
    கூடுவார் குறிப்பு ளாரே.
5
ஆர்வலம் நம்மின் மிக்கார்
    என்றஅவ் வரக்கர் கூடிப்
போர்வலஞ் செய்து மிக்குப்
    பொருதவர் தம்மை வீட்டித்
தேர்வலஞ் செற்ற மால்செய்
    திருஇரா மேச்சு ரத்தைச்
சேர்மட நெஞ்ச மேநீ
    செஞ்சடை எந்தை பாலே.
6
வாக்கினால் இன்பு ரைத்து
    வாழ்கிலார் தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள்
    உயிர்தனை யுண்டு மால்தான்
தேக்குநீர் செய்த கோயில்
    திருஇரா மேச்சு ரத்தை
நோக்கினால் வணங்கு வார்க்கு
    நோய்வினை நுணுகு மன்றே.
7
பலவுநாள் தீமை செய்து
    பார்தன்மேற் குழுமி வந்து
கொலைவிலார் கொடிய ராய
    அரக்கரைக் கொன்று வீழ்த்தச்
சிலையினான் செய்த கோயில்
    திருஇரா மேச்சு ரத்தைத்
தலையினால் வணங்கு வார்கள்
    தாழ்வராந் தவம தாமே.
8
கோடிமா தவங்கள் செய்து
    குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தால்
    எறிந்துவின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில்
    திருஇரா மேச்சு ரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ
    நன்னெறி யாகு மன்றே.
9
வன்கண்ணர் வாள ரக்கர்
    வாழ்வினை யொன்ற றியார்
புன்கண்ண ராகி நின்று
    போர்கள்செய் தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில்
    திருஇரா மேச்சு ரத்தைத்
தங்கணால் எய்த வல்லார்
    தாழ்வராந் தலைவன் பாலே.
10
வரைகளொத் தேயு யர்ந்த
    மணிமுடி அரக்கர் கோனை
விரையமுற் றாவொ டுக்கி
    மீண்டுமால் செய்த கோயில்
திரைகள்முத் தால்வ ணங்குந்
    திருஇரா மேச்சு ரத்தை
உரைகள்பத் தாலு ரைப்பார்
    உள்குவார் அன்பி னாலே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com