திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
நான்காம் திருமுறை |
4.14 தசபுராணம் பண் - காந்தார பஞ்சமம் |
பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட
இமையோர் இரிந்து பயமாய்
திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு
சுடுவா னெழுந்த விசைபோய்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை
அருளாய் பிரானே யெனலும்
அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட
அவனண்டர் அண்ட ரரசே.
|
1 |
நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட
நிலநின்று தம்ப மதுவப்
பரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை
யிருபாலு நின்று பணியப்
பிரமனு மாலுமேலை முடியோடு பாதம்
அறியாமை நின்ற பெரியோன்
பரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி
யவனா நமக்கோர் சரணே.
|
2 |
காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக
உருவாகி மூவர் உருவில்
சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின்
உருவாகி நின்ற தழலோன்
ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு
குறளாயோ ராலின் னிலைமேல்
பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி
யவனா நமக்கோர் சரணே.
|
3 |
நீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ
டுலகேழு மெங்கு நலியச்
சூடிய கையராகி இமையோர் கணங்கள்
துதியோதி நின்ற தொழலும்
ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்து
ஒழியாத கோபம் மொழிய
ஆடிய மாநடத்தெ மனலாடி பாதம்
அவையா நமக்கோர் சரணே.
|
4 |
நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும்
நிதனஞ்செய் தோடு புரமூன்
றலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர்
அரணம் புகத்தன் அருளால்
கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும்
அனல்பாய நீறு புரமா
மலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள
லவனா நமக்கோர் சரணே.
|
5 |
நீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற
னெரிகேசன் நேடி வருநாள்
காலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும்
அளவின்கண் வந்து குறுகிப்
பாலனை ஓடவோடப் பயமெய்து வித்த
உயிர்வவ்வு பாசம் விடுமக்
காலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர்
தொழுதோது சூடு கழலே.
|
6 |
உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில்
அவியுண்ண வந்த இமையோர்
பயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற
படிகண்டு நின்று பயமாய்
அயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி
கமியென் றிறைஞ்சி யகலச்
சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை
கழல்கண்டு கொள்கை சரணே.
|
7 |
நலமலி மங்கைநங்கை விளையாடி யோடி
நயனத் தலங்கள் கரமா
உலகினை ஏழுமுற்றும் இருள்மூட மூட
இருளோட நெற்றி யொருகண்
அலர்தர அஞ்சிமற்றை நயனங்கை விட்டு
மடவாள் இறைஞ்ச மதிபோல்
அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண்
அவனா நமக்கோர் சரணே.
|
8 |
கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு
கணையோன் அணைந்து புகலும்
மழைவடி வண்ணன்எண்ணி மனவோனை விட்ட
மலரான் தொட்ட மதனன்
எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள்
எரியென் றிறைஞ்சி யகலத்
தழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த
தழல்வண்ணன் எந்தை சரணே.
|
9 |
தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக
நிறைவென்று தன்க ணதனால்
உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை
பெருமான் உகந்து மிகவும்
சுடரடி யான்முயன்று சுழல்வித் தரக்கன்
இதயம் பிளந்த கொடுமை
அடல்வலி ஆழியாழி யவனுக் களித்த
அவனா நமக்கோர் சரணே.
|
10 |
கடுகிய தேர்செலாது கயிலாய மீது
கருதேலுன் வீர மொழிநீ
முடுகுவ தன்றுதன்ம மெனநின்று பாகன்
மொழிவானை நன்று முனியா
விடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன்
வரையுற் றெடுக்க முடிதோள்
நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம்
நினைவுற்ற தென்றன் மனனே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |