| திருஞானசம்பந்தர் தேவாரம் | 
| மூன்றாம் திருமுறை | 
3.57 திருவொற்றியூர் பண் - பஞ்சமம் | 
விடையவன் விண்ணுமண்ணுந் தொழநின்றவன் வெண்மழுவாட் 
படையவன் பாய்புலித்தோல் உடைகோவணம் பல்கரந்தைச் 
சடையவன் சாமவேதன் சசிதங்கிய சங்கவெண்தோ 
டுடையவன் ஊனமில்லி யுறையும்மிடம் ஒற்றியூரே.
  | 
1 | 
பாரிடம் பாணிசெய்யப் பறைக்கட்செறு பல்கணப்பேய் 
சீரொடும் பாடலாடல் இலயஞ்சிதை யாதகொள்கைத் 
தாரிடும் போர்விடையன் தலைவன்றலை யேகலனா 
ஊரிடும் பிச்சைகொள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே.
  | 
2 | 
விளிதரு நீருமண்ணும் விசும்போடனல் காலுமாகி 
அளிதரு பேரருளான் அரனாகிய ஆதிமூர்த்தி 
களிதரு வண்டுபண்செய் கமழ்கொன்றையி னோடணிந்த 
ஒளிதரு வெண்பிறையான் உறையும்மிடம் ஒற்றியூரே.
  | 
3 | 
அரவமே கச்சதாக அசைத்தானலர்க் கொன்றையந்தார் 
விரவிவெண் ணூல்கிடந்த விரையார்வரை மார்பன்எந்தை 
பரவுவார் பாவமெல்லாம் பறைத்துப்படர் புன்சடைமேல் 
உரவுநீ ரேற்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.
  | 
4 | 
விலகினார் வெய்யபாவம் விதியாலருள் செய்துநல்ல 
பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே 
அலகினால் வீசிநீர்கொண் டடிமேல்அல ரிட்டுமுட்டா 
துலகினா ரேத்தநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே.
  | 
5 | 
கமையொடு நின்றசீரான் கழலுஞ்சிலம் பும்ஒலிப்பச் 
சுமையொடு மேலும்வைத்தான் விரிகொன்றையுஞ் சோமனையும் 
அமையொடு நீண்டதிண்டோள் அழகாயபொற் றோடிலங்க 
உமையொடுங் கூடிநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே.
  | 
6 | 
நன்றியால் வாழ்வதுள்ளம் உலகுக்கொரு நன்மையாலே 
கன்றினார் மும்மதிலுங் கருமால்வரை யேசிலையாப் 
பொன்றினார் வார்சுடலைப் பொடிநீறணிந் தாரழல்அம் 
பொன்றினால் எய்தபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.
  | 
7 | 
பெற்றியாற் பித்தனொப்பான் பெருமான்கரு மானுரிதோல் 
சுற்றியான் சுத்திசூலஞ் சுடர்க்கண்ணுதல் மேல்விளங்கத் 
தெற்றியாற் செற்றரக்கன் னுடலைச்செழு மால்வரைக்கீழ் 
ஒற்றியான் முற்றுமாள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே.
  | 
8 | 
திருவினார் போதினானுந் திருமாலுமோர் தெய்வமுன்னித் 
தெரிவினாற் காணமாட்டார் திகழ்சேவடி சிந்தைசெய்து 
பரவினார் பாவமெல்லாம் பறையப்படர் பேரொளியோ 
டொருவனாய் நின்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.
  | 
9 | 
தோகையம் பீலிகொள்வார் துவர்க்கூறைகள் போர்த்துழல்வார் 
ஆகம செல்வனாரை அலர்தூற்றுதல் காரணமாக் 
கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக்கொள்ளன்மின் ஏழுலகும் 
ஓகைதந் தாளவல்லான் உறையும்மிடம் ஒற்றியூரே.
  | 
10 | 
ஒண்பிறை மல்குசென்னி இறைவன்னுறை யொற்றியூரைச் 
சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன 
பண்புனை பாடல்பத்தும் பரவிப்பணிந் தேத்தவல்லார் 
விண்புனை மேலுலகம் விருப்பெய்துவர் வீடெளிதே.
  | 
11 | 
| திருச்சிற்றம்பலம் |