| திருஞானசம்பந்தர் தேவாரம் | 
| மூன்றாம் திருமுறை | 
3.17 திருவிசயமங்கை பண் - காந்தாரபஞ்சமம் | 
மருவமர் குழலுமை பங்கர் வார்சடை 
அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாங் 
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள் 
விரவிய பொழிலணி விசய மங்கையே.
  | 
1 | 
கீதமுன் இசைதரக் கிளரும் வீணையர் 
பூதமுன் இயல்புடைப் புனிதர் பொன்னகர் 
கோதனம் வழிபடக் குலவு நான்மறை 
வேதியர் தொழுதெழு விசய மங்கையே.
  | 
2 | 
அக்கர வரையினர் அரிவை பாகமாத் 
தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர் 
தக்கநல் வானவர் தலைவர் நாடொறும் 
மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே.
  | 
3 | 
தொடைமலி இதழியுந் துன்எ ருக்கொடு 
புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர் 
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள் 
விடைமலி கொடியணல் விசய மங்கையே.
  | 
4 | 
தோடமர் காதினன் துதைந்த நீற்றினன் 
ஏடமர் கோதையோ டினித மர்விடங் 
காடமர் மாகரி கதறப் போர்த்ததோர் 
வேடம துடையணல் விசய மங்கையே.
  | 
5 | 
மைப்புரை கண்ணுமை பங்கன் வண்டழல் 
ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர் 
அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர் 
மெய்ப்பட அருள்புரி விசய மங்கையே.
  | 
6 | 
இரும்பொனின் மலைவிலின் எரிச ரத்தினால் 
வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர் 
சுரும்பமர் கொன்றையுந் தூய மத்தமும் 
விரும்பிய சடையணல் விசய மங்கையே.
  | 
7 | 
உளங்கையி லிருபதோ டொருப துங்கொடாங் 
களந்தரும் வரையெடுத் திடும்அ ரக்கனைத் 
தளர்ந்துடல் நெரிதர அடர்த்த தன்மையன் 
விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே.
  | 
8 | 
மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை 
அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர் 
தண்ணறுஞ் சாந்தமும் பூவும் நீர்கொடு 
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே.
  | 
9 | 
கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரை 
நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார் 
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர் 
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே.
  | 
10 | 
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை 
நண்ணிய புகலியுள் ஞான சம்பந்தன் 
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் 
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே.
  | 
11 | 
| திருச்சிற்றம்பலம் |