திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.79 திருவாரூர்
பண் - காந்தாரம்
பவனமாய்ச் சோடையாய் நாவெழாப்
    பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு
சிவனதாட் சிந்தியாப் பேதைமார்
    போலநீ வெள்கி னாயே
கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந்
    தேறிய காள கண்டன்
அவனதா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
1
தந்தையார் போயினார் தாயரும்
    போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார்
    பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்தநாள் வாழ்வதற் கேமனம்
    வைத்தியால் ஏழை நெஞ்சே
அந்தணா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
2
நிணங்குடர் தோல்நரம் பென்புசேர்
    ஆக்கைதான் நிலாய தன்றால்
குணங்களார்க் கல்லது குற்றம்நீங்
    காதெனக் குலுங்கி னாயே
வணங்குவார் வானவர் தானவர்
    வைகலும் மனங்கொ டேத்தும்
அணங்கனா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
3
நீதியால் வாழ்கிலை நாள்செலா
    நின்றன நித்த நோய்கள்
வாதியா ஆதலால் நாளும்நாள்
    இன்பமே மருவி னாயே
சாதியார் கின்னரர் தருமனும்
    வருணனும் ஏத்து முக்கண்
ஆதியா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
4
பிறவியால் வருவன கேடுள
    ஆதலாற் பெரிய இன்பத்
துறவியார்க் கல்லது துன்பம்நீங்
    காதெனத் தூங்கி னாயே
மறவல்நீ மார்க்கமே நண்ணினாய்
    தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவனா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
5
செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த்
    தேரைவாய்ச் சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற
    லாமென்று கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந்
    தன்பரா யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
6
ஏறுமால் யானையே சிவிகையந்
    தளகமீச் சோப்பி வட்டில்
மாறிவா ழுடம்பினார் படுவதோர்
    நடலைக்கு மயங்கி னாயே
மாறிலா வனமுலை மங்கையோர்
    பங்கினர் மதியம் வைத்த
ஆறனா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
7
என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண்
    சுவரெறிந் திதுநம் இல்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல்
    லாமையான் முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார்
    குரம்பையின் மூழ்கி டாதே
அன்பனா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
8
தந்தைதாய் தன்னுடன் தோன்றினார்
    புத்திரர் தார மென்னும்
பந்தம்நீங் காதவர்க் குய்ந்துபோக்
    கில்லெனப் பற்றி னாயே
வெந்தநீ றாடியார் ஆதியார்
    சோதியார் வேத கீதர்
எந்தையா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
9
நெடியமால் பிரமனும் நீண்டுமண்
    ணிடந்தின்னம் நேடிக் காணாப்
படியனார் பவளம்போல் உருவனார்
    பனிவளர் மலையாள் பாக
வடிவனார் மதிபொதி சடையனார்
    மணியணி கண்டத் தெண்டோள்
அடிகளா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
10
பல்லிதழ் மாதவி அல்லிவண்
    டியாழ்செயுங் காழி யூரன்
நல்லவே நல்லவே சொல்லிய
    ஞானசம் பந்தன் ஆரூர்
எல்லியம் போதெரி யாடுமெம்
    மீசனை யேத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீதிலர்
    ஓதநீர் வைய கத்தே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.101 திருவாரூர் - திருவிராகம்
பண் - நட்டராகம்
பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக
நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர்
கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி
அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே.
1
விண்ட வெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர்
கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய்
அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே.
2
கறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர்
மறுத்துமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர்
வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி
அறுத்துமண்டி யாவிபாயும் அந்தணாரூ ரென்பதே.
3
அஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில்
குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர்
பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை
அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே.
4
சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்
தங்குலாவி நின்றஎங்க ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறும் அந்தணாரூ ரென்பதே.
5
கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ
டுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான் உகந்தவூர்
துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய்
அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தணாரூ ரென்பதே.
6
கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை
மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே.
7
வரைத்தல மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும்
நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர்
நிரைத்தமாளி கைத்திருவின் நேரனார்கள் வெண்ணகை
அரத்தவாய் மடந்தைமார்கள் அந்தணாரூ ரென்பதே.
8
இருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் பறந்துமெய்
வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழந்தவூர்
செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறும அந்தணாரூ ரென்பதே.
9
பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம்
வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர்
மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல்
அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே.
10
வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா
அல்லிமா தமர்ந்திருந்த அந்தணாரூ ராதியை
நல்லசொல்லும் ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை
வல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com