| திருஞானசம்பந்தர் தேவாரம் | 
| இரண்டாம் திருமுறை | 
2.4 திருவான்மியூர் பண் - இந்தளம் | 
கரையு லாங்கட லிற்பொலி சங்கமவெள் ளிப்பிவன் 
திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர் 
உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர் 
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.
  | 
1 | 
சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ் 
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச் 
சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர் 
அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே.
  | 
2 | 
கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறந் 
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர் 
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர் 
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.
  | 
3 | 
மஞ்சு லாவிட மாட மதிற்பொலி மாளிகைச் 
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்த் 
துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர் 
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.
  | 
4 | 
மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில் 
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த் 
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர் 
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.
  | 
5 | 
போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறந் 
தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர்ச் 
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர் 
மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.
  | 
6 | 
வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த் 
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த் 
தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர் 
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.
  | 
7 | 
தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத் 
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த் 
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர் 
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.
  | 
8 | 
பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால் 
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்ச் 
சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர் 
எருது மேல்கொ டுழன் றுகந் தில்பலி யேற்றதே.
  | 
9 | 
மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ் 
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர் 
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர் 
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.
  | 
10 | 
மாதொர் கூறடை நற்றவ னைத்திரு வான்மியூர் 
ஆதி யெம்பெரு மானருள் செய்த வினாவுரை 
ஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல் 
நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே.
  | 
11 | 
| திருச்சிற்றம்பலம் |