திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.2 திருவலஞ்சுழி பண் - இந்தளம் |
விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே.
|
1 |
பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்
வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்
ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே.
|
2 |
கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்
விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே.
|
3 |
கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழிச்
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை யின்னற வேற்றதே.
|
4 |
கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
முல்லை வெண்முறு வல்நகை யாளொளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே.
|
5 |
பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே.
|
6 |
கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தரீஇ
வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே.
|
7 |
தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழிக்
கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற் றதலை கொண்டுல கொக்க வுழன்றதே.
|
8 |
தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே.
|
9 |
உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழிப்
பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர்
சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே.
|
10 |
வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.106 திருவலஞ்சுழி பண் - நட்டராகம் |
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
யிருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை
முழுமணித் தளரங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே.
|
1 |
விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை
விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய
இறைவனை உலகத்தில்
வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை
வலஞ்சுழி யிடமாகக்
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ
டினிதிருந் தமையாலே.
|
2 |
திருந்த லார்புரந் தீயெழச் செறுவன
விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில் வருவன
மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்து மாவன மந்திர மாவன
வலஞ்சுழி யிடமாக
இருந்த நாயகன் இமையவ ரேத்திய
இணையடித் தலந்தானே.
|
3 |
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர்
அறத்திற முனிவர்க்கன்
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந்
தினிதருள் பெருமானார்
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி
யிடமகிழ்ந் தருங்கானத்
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய
அற்புதம் அறியோமே.
|
4 |
மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம்
எரியுரு வொருபாகம்
பெண்ண ராணெனத் தெரிவரு வடிவினர்
பெருங்கடற் பவளம்போல்
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார்
பரிபவர் மனம்புக்க
எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர்
இணையடி தொழுவாரே.
|
5 |
ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர்
மேனியர் மடமாதர்
இருவ ராதரிப் பார்பல பூதமும்
பேய்களும் அடையாளம்
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித்
தகந்தொறும் பலிக்கென்று
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே
வரிவளை கவர்ந்தாரே.
|
6 |
குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங்
குலவிய நெய்த்தானம்
என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர்
இமையவர் பணிகேட்பார்
அன்றி யூர்தமக் குள்ளன அறிகிலோம்
வலஞ்சுழி யரனார்பால்
சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று
சேயிழை தளர்வாமே.
|
7 |
குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக்
குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி
தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன்
வலஞ்சுழி யெம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்
அல்லவர் காணாரே.
|
8 |
அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும்
அரவணைத் துயின்றானுங்
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்
மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு
துன்பங்கள் களைவாரே.
|
9 |
அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
தவம்புரிந் தவஞ்செய்வார்
நெறிய லாதன கூறுவர் மற்றவை
தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி
மருவிய பெருமானைப்
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில்
அளவறுப் பொண்ணாதே.
|
10 |
மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய
மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்
நவிற்றிய தமிழ்மாலை
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக்
கேட்டுகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும்
வருத்தம்வந் தடையாவே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |