திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.82 திருத்தேவூர்
பண் - காந்தாரம்
பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்
விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி
தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன் றிலமே.
1
ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த்
தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர்
ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
2
மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள்
செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர்
அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
3
முத்தன் சில்பலிக் கூர்தொறும் முறைமுறை திரியும்
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன்னடி யார்கள்
சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர்
அத்தன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
4
பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால்
கூடு வார்துணைக் கொண்டதம் பற்றாப் பற்றித்
தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர்
ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
5
பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்
திங்கள் சூடிய தீநிறக் கடவுள்தென் தேவூர்
அங்க ணன்றனை அடைந்தனம் அல்லலொன் றிலமே.
6
வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத்
தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்க
தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
7
தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுகன் நெரிந்து
வெருவ வூன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான்
தெருவு தோறும்நல் தென்றல்வந் துலவிய தேவூர்
அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே.
8
முந்திக் கண்ணனும் நான்முக னும்மவர் காணா
எந்தை திண்டிறல் இருங்களி றுரித்தவெம் பெருமான்
செந்தி னத்திசை யறுபத முரல்திரு தேவூர்
அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லலொன் றிலமே.
9
பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு
தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுள்தென் தேவூர்
ஆறு சூடியை யடைந்தனம் அல்லலொன் றிலமே.
10
அல்ல லின்றிவிண் ணாள்வார்கள் காழியர்க் கதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்
எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com