திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.93 திருத்தெங்கூர் பண் - பியந்தைக்காந்தாரம் |
புரைசெய் வல்வினை தீர்க்கும்
புண்ணியர் விண்ணவர் போற்றக்
கரைசெய் மால்கடல் நஞ்சை
உண்டவர் கருதலர் பு[ரங்கள்
இரைசெய் தாரழ லூட்டி
யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர்
விரைசெய் பூம்பொழிற் றெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
|
1 |
சித்தந் தன்னடி நினைவார்
செடிபடு கொடுவினை தீர்க்குங்
கொத்தின் தாழ்சடை முடிமேற்
கோளெயிற் றரவோடு பிறையன்
பத்தர் தாம்பணிந் தேத்தும்
பரம்பரன் பைம்புனல் பதித்த
வித்தன் தாழ்பொழிற் றெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
|
2 |
அடையும் வல்வினை யகல
அருள்பவர் அனலுடை மழுவாட்
படையர் பாய்புலித் தோலர்
மைம்புனற் கொன்றையர் படர்புன்
சடையில் வெண்பிறை சூடித்
தார்மணி யணிதரு தறுகண்
விடையர் வீங்கெழிற் றெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
|
3 |
பண்டு நான்செய்த வினைகள்
பறையவோர் நெறியருள் பயப்பார்
கொண்டல் வான்மதி சூடிக்
குரைகடல் விடமணி கண்டர்
வண்டு மாமல ரூதி
மதுவுண இதழ் மறிவெய்தி
விண்ட வார்பொழிற் றெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
|
4 |
சுழித்த வார்புனற் கங்கை
சூடியோர் காலனைக் காலால்
தெழித்து வானவர் நடுங்கச்
செற்றவர் சிறையணி பறவை
கழித்த வெண்டலை யேந்திக்
காமன துடல் பொடியாக
விழித்த வர்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
|
5 |
தொல்லை வல்வினை தீர்ப்பார்
சுடலைவெண் பொடியணி சுவண்டர்
எல்லி சூடிநின் றாடும்
இறையவர் இமையவ ரேத்தச்
சில்லை மால்விடை யேறித்
திரிபுரந் தீயெழச் செற்ற
வில்லி னார்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
|
6 |
நெறிகொள் சிந்தைய ராகி
நினைபவர் வினைகெட நின்றார்
முறிகொள் மேனிமுக் கண்ணர்
முளைமதி நடுநடுத் திலங்கப்
பொறிகொள் வாளர வணிந்த
புண்ணியர் வெண்பொடிப் பூசி
வெறிகொள் பூம்பொழிற் றெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
|
7 |
எண்ணி லாவிற லரக்கன்
எழில்திகழ் மால்வரை யெடுக்கக்
கண்ணெ லாம்பொடிந் தலறக்
கால்விர லூன்றிய கருத்தர்
தண்ணு லாம்புனற் கண்ணி
தயங்கிய சடைமுடிச் சதுரர்
விண்ணு லாம்பொழிற் றெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
|
8 |
தேடித் தானயன் மாலுந்
திருமுடி யடியிணை காணார்
பாடத் தான்பல பூதப்
படையினர் சுடலையிற் பலகால்
ஆடத் தான்மிக வல்லர்
அருச்சுனற் கருள்செயக் கருதும்
வேடத் தார்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
|
9 |
சடங்கொள் சீவரப் போர்வைச்
சாக்கியர் சமணர் சொல்தவிர
இடங்கொள் வல்வினை தீர்க்கும்
ஏத்துமின் இருமருப் பொருகைக்
கடங்கொள் மால்களிற் றுரியர்
கடல்கடைந் திடக்கனன் றெழுந்த
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.
|
10 |
வெந்த நீற்றினர் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்
கந்த மார்பொழில் சூழ்ந்த
காழியுள் ஞானசம் பந்தன்
சந்த மாயின பாடல்
தண்டமிழ் பத்தும் வல்லார்மேல்
பந்த மாயின பாவம்
பாறுதல் தேறுதல் பயனே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |