திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.53 திருப்புறவார் பனங்காட்டூர் (பனையபுரம்)
பண் - சீகாமரம்
விண்ண மர்ந்தன மும்ம தில்களை
    வீழ வெங்கணை யாலெய் தாய்விரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
    பெண்ண மர்ந்தொரு பாக மாகிய
பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
    கண்ண மர்ந்தவ னேகலந்தார்க் கருளாயே.
1
நீடல் கோடல் அலரவெண் முல்லை
    நீர்ம லர்நிறைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
    தோடி லங்கிய காத யல்மின்
துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
    ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே.
2
வாளை யுங்கய லும்மி ளிர்பொய்கை
    வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
    பூளை யுந்நறுங் கொன்றை யும்மத
மத்த மும்புனை வாய்க ழலிணைத்
    தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.
3
மேய்த்தி ளஞ்செந்நெல் மென்கதிர் கவ்வி
    மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
    ஆய்ந்த நான்மறை பாடி யாடும்
அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
    சாய்ந்தடி பரவுந் தவத்தார்க் கருளாயே.
4
செங்க யல்லொடு சேல்செ ருச்செயச்
    சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
    கங்கை யும்மதி யுங்க மழ்சடைக்
கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
    அங்கை யாடலனே அடியார்க் கருளாயே.
5
நீரி னார்வரை கோலி மால்கடல்
    நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்
    காரி னார்மலர்க் கொன்றை தாங்கு
கடவு ளென்றுகை கூப்பி நாடொறுஞ்
    சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.
6
கைய ரிவையர் மெல்வி ரல்லவை
    காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி
பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்
    மெய்ய ரிவையோர் பாக மாகவும்
மேவி னாய்கழ லேத்தி நாடொறும்
    பொய்யிலா அடிமை புரிந்தார்க் கருளாயே.
7
தூவி யஞ்சிறை மென்ன டையன
    மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
    மேவி யந்நிலை யாய ரக்கன
தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
    ஏவிய பெருமான் என்பவர்க் கருளாயே.
8
அந்தண் மாதவி புன்னை நல்ல
    அசோக மும்மர விந்த மல்லிகை
பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
    எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன்
என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
    சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.
9
நீண மார்முரு குண்டு வண்டினம்
    நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
    நாண ழிந்துழல் வார்ச மணரும்
நண்பில் சாக்கிய ருந்ந கத்தலை
    ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே.
10
மையி னார்மணி போல்மி டற்றனை
    மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்
பைய தேன்பொழில் சூழ்புறவார் பனங்காட்டூர்
    ஐய னைப்புக ழான காழியுள்
ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
    செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com