திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.121 திருப்பாதிரிப்புலியூர்
பண் - செவ்வழி
முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியாக் கையைப் பெறுவார்களே.
1
கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே
முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்னிடம்
புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை
உள்ள நம்மேல் வினையாயின வொழியுங்களே.
2
மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்
பொருளினல்லார் பயில்பா திரிப்புலி யூருளான்
பெருளின்மானின் பிணைநோக்கல் செய்துவெறி செய்தபின்
அருளியாகத் திடைவைத் ததுவும் மழகாகவே.
3
போதினாலும் புகையாலும் உய்த்தே யடியார்கள்தாம்
போதினாலே வழிபாடு செய்யப் புலியூர்தனுள்
ஆதினாலும் மவலம் மிலாதவடி கள்மறை
ஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே.
4
ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை
நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன்
போகநல்லார் பயிலும் பாதிரிப்புலி யூர்தனுள்
பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே.
5
மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப்
புதியமுத்தந் திகழ்பா திரிப்புலி யூரெனும்
பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள்
குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே.
6
கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச்
சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப்
பொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள்
அங்கரவம் மரையில் லசைத்தான் அடைமினே.
7
வீக்கமெழும் இலங்கைக் கிறைவிலங் கல்லிடை
ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான்
பூக்கமழும் புனல்பா திரிப்புலி யூர்தனை
நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே.
8
அன்னந்தாவும் மணியார் பொழின்மணி யார்புன்னை
பொன்னந்தாது சொரிபா திரிப்புலி யூர்தனுள்
முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன்
தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே.
9
உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்
திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்
எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்
புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே.
10
அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம்
பந்தன்நல் லார்பயில் பாதிரிப்புலி யூர்தனுள்
சந்தமாலைத் தமிழ்பத் திவைதரித் தார்கள்மேல்
வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com