திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.57 திருநல்லூர் பண் - காந்தாரம் |
பெண்ணமருந் திருமேனி யுடையீர்பிறங்கு சடைதாழப்
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
|
1 |
அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி அங்கையில்
கொலைமல்கு வெண்மழுவும் அனலுமேந்துங் கொள்கையீர்
சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
|
2 |
குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப்
பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
|
3 |
கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர்
மானமரும் மென்விழியாள் பாகமாகும் மாண்பினீர்
தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
|
4 |
நிணங்கவரும் மூவிலையும் அனலுமேந்தி நெறிகுழலாள்
அணங்கமரும் பாடலோ டாடல்மேவும் அழகினீர்
திணங்கவரும் ஆடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர்
மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
|
5 |
கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ
வார்மருவு மென்முலையாள் பாகமாகும் மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே.
|
6 |
ஊன்தோயும் வெண்மழுவும் அனலுமேந்தி உமைகாண
மீன்தோயுந் திசைநிறைய ஓங்கியாடும் வேடத்தீர்
தேன்தோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
வான்தோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
|
7 |
காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப
மாதமரும் மென்மொழியாள் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்
தீதமரா அந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர்
மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
|
8 |
போதின்மேல் அயன்திருமால் போற்றியும்மைக் காணாது
நாதனே இவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்
தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்புந் திருநல்லூர்
மாதராள் அவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே.
|
9 |
பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன்
றல்லாதார் அறவுரைவிட் டடியார்கள் போற்றோவா
நல்லார்கள் அந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர்
மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
|
10 |
கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிநைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்
பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல்
சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |