திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.33 திருநள்ளாறு - திருவிராகம்
பண் - இந்தளம்
ஏடமலி கொன்றையர விந்துஇள வன்னி
மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது வீசியநள் ளாறே.
1
விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த
புண்ணியன் இருக்குமிட மென்பர்புவி தன்மேல்
பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள்
நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே.
2
விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்
துளங்கொள இருத்திய ஒருத்தனிட மென்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே.
3
கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச்
செக்கரவர் சேருமிட மென்பர்தடம் மூழ்கிப்
புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி
நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே.
4
நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார்
வஞ்சம தறுத்தருளும் மற்றவனை வானோர்
அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த
நஞ்சமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே.
5
பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங்
காலனுடன் மாளமு னுதைத்தஅர னூராங்
கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்
நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே.
6
நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை
பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை
வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
ஓதியரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே.
7
கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை
எடுத்தவன் முடித்தலைகள் பத்தும்மிகு தோளும்
அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாட
நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே.
8
உயர்ந்தவ னுரக்கொடு திரிந்துலக மெல்லாம்
பயந்தவன் நினைப்பரிய பண்பனிட மென்பர்
வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும்
நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே.
9
சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்
பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னூர்
மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்
சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே.
10
ஆடலர வார்சடையன் ஆயிழைதன் னோடும்
நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றை
மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com