திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.62 திருமீயச்சூர்
பண் - காந்தாரம்
காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன்
மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.
1
பூவார் சடையின் முடிமேற் புனலர் அனல்கொள்வர்
நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி
ஏவார் மலையே சிலையாக் கழியம் பெரிவாங்கி
மேவார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.
2
பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
மின்னேர் சடைக ளுடையான் மீயச் சூரானைத்
தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்க்
கன்னே ரிமையோர் உலக மெய்தற் கரிதன்றே.
3
வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்துப்
பாகம் உமையோ டாகப் படிதம் பலபாட
நாகம் அரைமே லசைத்து நடமா டியநம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.
4
விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்
படையார் பூதஞ் சூழப் பாட லாடலார்
பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார்
விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே.
5
குளிருஞ் சடைகொள் முடிமேற் கோல மார்கொன்றை
ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன்
மிளிரும் மரவம் உடையான் மீயச் சூரானே.
6
நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்
கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார்
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச் சூரானே.
7
புலியின் உரிதோ லாடை பூசும் பொடிநீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தார் உமையஞ்ச
வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே.
8
காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார்
போதி லவனும் மாலுந் தொழப் பொங் கெரியானார்
கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி
மேதி படியும வயல்சூழ் மீயச் சூராரே.
9
கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக்
கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார்
பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லால்
விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.
10
வேட முடைய பெருமா னுறையும் மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்
பாட லாய தமிழீ ரைந்தும் மொழிந்துள்கி
ஆடும் அடியார் அகல்வா னுலகம் அடைவாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com