திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.9 திருமழபாடி பண் - இந்தளம் |
களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்
டளையுங் கொன்றையந் தார்மழ பாடியுள் அண்ணலே.
|
1 |
காச்சி லாதபொன் நோக்குங் கனவயி ரத்திரள்
ஆச்சி லாதப ளிங்கினன் அஞ்சுமுன் ஆடினான்
பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே.
|
2 |
உரங்கெ டுப்பவன் உம்பர்க ளாயவர் தங்களைப்
பரங்கெ டுப்பவன் நஞ்சையுண் டுபக லோன்றனை
முரண்கெ டுப்பவன் முப்புரந் தீயெழச் செற்றுமுன்
வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே.
|
3 |
பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்
வெள்ளம் ஆதரித் தான்விடை யேறிய வேதியன்
வள்ளல் மாமழ பாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரி மின்வினை யாயின ஓயவே.
|
4 |
தேனு லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள்
பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன்
வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங்
கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே.
|
5 |
தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப்
புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே.
|
6 |
சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை
எந்தை யான்இமை யாதமுக் கண்ணினன் எம்பிரான்
மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச்
சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே.
|
7 |
இரக்க மொன்றுமி லான்இறை யான்திரு மாமலை
உரக்கை யாலெடுத் தான்றன தொண்முடி பத்திற
விரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன்
வரத்தை யேகொடுக் கும்மழ பாயுள் வள்ளலே.
|
8 |
ஆலம் உண்டமு தம்மம ரர்க்கருள் அண்ணலார்
காலன் ஆரயிர் வீட்டிய மாமணி கண்டனார்
சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விடம்
மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே.
|
9 |
கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும்
நலியும் நாள்கெடுத் தாண்டஎன் நாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும்
மலியும் மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே.
|
10 |
மலியு மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
கலிசெய் மாமதில் சூழ்கடற் காழிக் கவுணியன்
ஒலிசெய் பாடல்கள் பத்திவை வல்லார் ....உலகத்திலே(*)
(*) இச்செய்யுளின் மீதமுள்ள அடிகள் சிதைவுற்றன.
|
11 |
திருச்சிற்றம்பலம் |