திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.18 திருமருகல் - விடந்தீர்த்த திருப்பதிகம் பண் - இந்தளம் |
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.
|
1 |
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.
|
2 |
அறையார் கழலும் மழல்வா யரவும்
பிறையார் சடையும் முடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.
|
3 |
ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.
|
4 |
துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்ட முடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.
|
5 |
பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே.
|
6 |
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே.
|
7 |
இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதிள்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் லிவளை அலராக் கினையே.
|
8 |
எரியார் சடையும் மடியும் மிருவர்
தெரியா ததோர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே.
|
9 |
அறிவுஇல் சமணும் அலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே.
|
10 |
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |