திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.107 திருக்கேதீச்சரம்
பண் - நட்டராகம்
விருது குன்றமா மேருவில் நாணர
    வாவனல் எரியம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
    றுறைபதி யெந்நாளுங்
கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
    பொழிலணி மாதோட்டங்
கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
    கடுவினை யடையாவே.
1
பாடல் வீணையர் பலபல சரிதையர்
    எருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்
    சுண்டிருள் கண்டத்தர்
ஈட மாவது இருங்கடற் கரையினில்
    எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரங் கைதொழக்
    கெடுமிடர் வினைதானே.
2
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
    அறைகழல் சிலம்பார்க்கச்
சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர்
    அகந்தொறும் இடுபிச்சைக்
குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர்
    உயர்தரு மாதோட்டத்
தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க்
    கருவினை யடையாவே.
3
பொடிகொள் மேனியர் புலியத ளரையினர்
    விரிதரு கரத்தேந்தும்
வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
    மறிகடல் மாதோட்டத்
தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம்
    பரிந்தசிந் தையராகி
முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்
    மொய்த்தெழும் வினைபோமே.
4
நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம்
    மடைந்தவர்க் கருளீய
வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்
    மலிகடல் மாதோட்டத்
தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம்
    இராப்பகல் நினைந்தேத்தி
அல்லல் ஆசறுத் தரண்டி யிணைதொழும்
    அன்பராம் அடியாரே.
5
பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப்
    பொருந்தவைத் தொருபாகம்
மாழை யங்கயற் கண்ணியா லருளிய
    பொருளினர் குடிவாழ்க்கை
வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
    மருவிய மாதோட்டக்
கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே
    தீச்சரம் பிரியாரே.
6
பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல்
    லுலகினில் உயிர்வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடங் கைதொழக்
    காதலித் துறைகோயில்
வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை
    நடமிடு மாதோட்டந்
தொண்டர் நாடொறுந் துதிசெய அருள்செய்கே
    தீச்சர மதுதானே.
7
தென்னி லங்கையர் குலபதி மலைநலிந்
    தெடுத்தவன் முடிதிண்டோள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த
    தலைவனார் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்
    பொருந்திய மாதோட்டத்
துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே
    தீச்சரத் துள்ளாரே.
8
பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும்
    புவியிடந் தெழுந்தோடி
மேவி நாடிநின் அடியிணை காண்கிலா
    வித்தக மென்னாகும்
மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
    தோட்டநன் னகர்மன்னித்
தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத்
    திருந்தஎம பெருமானே.
9
புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர்
    புறனுரைச் சமணாதர்
எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய
    ஏழைமை கேளேன்மின்
மத்த யானையை மறுகிட உரிசெய்து
    போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
    தீச்சரம் அடைமின்னே.
10
மாடெ லாமண முரசெனக் கடலின
    தொலிகவர் மாதோட்டத்
தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத்
    தடிகளை யணிகாழி
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல்
    நவின்றெழு பாமாலைப்
பாட லாயின பாடுமின் பத்தர்கள்
    பரகதி பெறலாமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com