திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.21 திருக்கழிப்பாலை பண் - இந்தளம் |
புனலா டியபுன் சடையாய் அரணம்
அனலா கவிழித் தவனே அழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
உனவார் கழல்கை தொழுதுள் குதுமே.
|
1 |
துணையா கவொர்தூ வளமா தினையும்
இணையா கவுகந் தவனே இறைவா
கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்
இணையார் கழலேத் தவிடர் கெடுமே.
|
2 |
நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
அடியார்க் கடையா அவலம் மவையே.
|
3 |
எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ
வளிகா யமென வெளிமன் னியதூ
ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்
களியாய் கழிப்பா லையமர்ந் தவனே.
|
4 |
நடநண் ணியொர்நா கமசைத் தவனே
விடநண் ணியதூ மிடறா விகிர்தா
கடல்நண் ணுகழிப் பதிகா வலனே
உடன்நண் ணிவணங் குவனுன் னடியே.
|
5 |
பிறையார் சடையாய் பெரியாய் பெரியம்
மறையார் தருவாய் மையினா யுலகிற்
கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
இறையார் கழலேத் தவிடர் கெடுமே.
|
6 |
முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்
கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்
கதிரும் வினையா யினஆ சறுமே.
|
7 |
எரியார் கணையால் எயிலெய் தவனே
விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
உரிதா கிவணங் குவனுன் னடியே.
|
8 |
நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்
கனலா னவனே கழிப்பா லையுளாய்
உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்
கிலதாம் வினைதான் எயிலெய் தவனே.
|
9 |
தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்
துவர்கொண் டனநுண் துகிலா டையரும்
அவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும்
உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே.
|
10 |
கழியார் பதிகா வலனைப் புகலிப்
பழியா மறைஞா னசம்பந் தனசொல்
வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்
கெழியார் இமையோ ரொடுகே டிலரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |