திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.95 திருஅரிசிலி
பண் - பியந்தைக்காந்தாரம்
பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோள்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம்அர சிலியே.
1
ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி
வேறு செய்ததன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த
ஊறு தேனவன் உம்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம்
ஆறு சேர்தரு சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே.
2
கங்கை நீர்சடை மேலே கதம்மிகக் கதிரிள வனமென்
கொங்கை யாளொரு பாக மருவிய கொல்லை வெள்ளேற்றன்
சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார்க் கருள்செய்து
அங்கை யாலன லேந்தும் அடிகளுக் கிடம்அர சிலியே.
3
மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப்
புக்க ஊரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக் கிடம்அர சிலியே.
4
மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமும் மருவித்
தானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து
வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி
ஆனஞ் சாடிய சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே.
5
பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்கு மத்தாகப்
பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக்
கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு
அரிய ஆரமு தாக்கும் அடிகளுக் கிடம்அர சிலியே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணுந் தோளும்நல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாயருள் செய்த அடிகளுக் கிடம்அர சிலியே.
8
குறிய மாணுரு வாகிக் குவலயம் அளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்த வத்தோனுஞ்
செறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடம்அர சிலியே.
9
குரளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத்
திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல்
பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும்
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக் கிடம்அர சிலியே.
10
அல்லி நீள்வயல் சூழ்ந்த அரிசிலி யடிகளைக் காழி
நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளுஞ்
சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த
வல்ல வானுல கெய்தி வைகலும் மகிழ்ந்திருப் பாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com