திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.103 திருஅம்பர்மாகாளம் பண் - நட்டராகம் |
புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்
போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும்
பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க்
கருவினை அடையாவே.
|
1 |
அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள்
அங்கையில் அனலேந்தி
இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக
ளிசைவன பலபூதம்
மரவந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர்
பயன்தலைப் படுவாரே.
|
2 |
குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங்
குரைகழ லடிசேரக்
கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங்
கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை
வல்வினை அடையாவே.
|
3 |
எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர்
இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந்
தாமகிழ்ந் தவர்மேய
மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கங்கு லும்பக லுந்தொழும் அடியவர்
காதன்மை யுடையாரே.
|
4 |
நெதியம் என்னுள போகமற் றென்னுள
நிலமிசை நலமாய
கதியம் என்னுள வானவர் என்னுளர்
கருதிய பொருள்கூடில்
மதியந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண்
டேத்துதல் புரிந்தோர்க்கே.
|
5 |
கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக்
கனல்விடு சுடர்நாகந்
தெண்ணி லாவொடு திலகமு நகுதலை
திகழவைத் தவர்மேய
மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ்
வுலகினில் உயர்வாரே.
|
6 |
தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ்
சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும்
புகழ்புரிந் தவர்மேய
மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற்
பெருமையைப் பெறுவாரே.
|
7 |
பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப்
பருவரைக் கீழூன்றி
எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த
இறையவன் உறைகோயில்
மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை
கனலிடைச் செதிளன்றே.
|
8 |
உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின்
ஒளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும்
பரவநின் றவர்மேய
மையு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளங்
கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங்
கவலையுங் களைவாரே.
|
9 |
பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும்
பீலிகொண் டுழல்வாருங்
கண்ட நூலருங் கடுந்தொழி லாளருங்
கழறநின் றவர்மேய
வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றாப்
பரவுதல் செய்வோமே.
|
10 |
மாறு தன்னொடு மண்மிசை யில்லது
வருபுனல் மாகாளத்
தீறும் ஆதியு மாகிய சோதியை
ஏறமர் பெருமானை
நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்
பந்தன தமிழ்மாலை
கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங்
குற்றங்கள் குறுகாவே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |