திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.106 திருஊறல் (தக்கோலம்)
பண் - வியாழக்குறிஞ்சி
மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று
நீறெழ எய்தவெங்கள் நிமலன் இடம்வினவில்
தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல் உள்குதுமே.
1
மத்த மதக்கரியை மலையான்மகள் அஞ்சவன்று கையால்
மெத்த உரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலம்நாளுந் நயனம்
ஒத்தல ருங்கழனித் திருவூறலை உள்குதுமே.
2
ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டழகார் நன்றுங்
கானமர் மான்மறிக் கைக்கடவுள் கருதுமிடம்
வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை
ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே.
3
நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு வும்மனலும் அன்று
கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவின்
மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை உள்குதுமே.
4
எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு
சண்டி தொழவளித்தான் அவன்றாழும் இடம்வினவில்
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை கள்சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரானமருந் திருவூறலை உள்குதுமே.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி
மறுக்குறும் மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரிய அன்று
ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே.
8
நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று
தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரம் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே.
9
பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்
என்னும் இவர்க்கருளா ஈசன் இடம்வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை
உன்னவினை கெடுப்பான் திருவூறலை உள்குதுமே.
10
கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச
ஓடுபுனல் சடைமேற் கரந்தான் திருவூறல்
நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்து இருப்பாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com