திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.57 திருவேற்காடு பண் - பழந்தக்கராகம் |
ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே.
|
1 |
ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே.
|
2 |
பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
கேதம் எய்துத லில்லையே.
|
3 |
ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திட
பாழ்ப டும்மவர் பாவமே.
|
4 |
காட்டி னாலும் அயர்த்திடக் காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை ஒல்லையே.
|
5 |
தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே.
|
6 |
மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லி னானுறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே.
|
7 |
மூரல் வெண்மதி சூடு முடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடு நினைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே.
|
8 |
பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னானுறை வேற்காட்இர்
அரக்கன் ஆண்மை யடரப் பட்டானிறை
நெருக்கி னானை நினைமினே.
|
9 |
மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாயெழில்
கூறி னார்க்கில்லை குற்றமே.
|
10 |
விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன் செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |