திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.10 திருவண்ணாமலை பண் - நட்டபாடை |
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
|
1 |
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.
|
2 |
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ்
சூலிம்மணி தலைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.
|
3 |
உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.
|
4 |
மலவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.
|
5 |
பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக் குறநோயடை யாவே.
|
6 |
கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.
|
7 |
ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.
|
8 |
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறவல்உமை தலைவன்னடி சரணே.
|
9 |
வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்
மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை அண்ணல்
கூர்வெண்மழுப் படையான்நல கழல்சேர்வது குணமே.
|
10 |
வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.69 திருவண்ணாமலை பண் - தக்கேசி |
பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
|
1 |
மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார்
நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும்
வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி
அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே.
|
2 |
ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
|
3 |
இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார்புரமெய்தார்
பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம்
அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே.
|
4 |
உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீயெழுவித்தார்
பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம்
அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே.
|
5 |
எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே.
|
6 |
வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில்
முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
|
7 |
மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்
நிறந்தான்முரிய நெறியவூன்றி நிறையஅருள்செய்தார்
திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட
அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே.
|
8 |
தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை
மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு
கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென்
றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே.
|
9 |
தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும்
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள்
வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில்
அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே.
|
10 |
அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை
நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன்
சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று
வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |