திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.86 திருநல்லூர் பண் - குறிஞ்சி |
குறிஞ்சிகொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.
|
1 |
ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும்
வேறும் முடனுமாம் விகிர்தர் அவரென்ன
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறு மடியார்கட் கடையா குற்றமே.
|
2 |
சூடும் இளந்திங்கள் சுடர் பொற்சடைதாழ
ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை
நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
பாடும் மடியார்கட் கடையா பாவமே.
|
3 |
நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
காத்த நெறியானைக் கைகூப்பித் தொழு
தேத்தும் அடியார்கட் கில்லை யிடர்தானே.
|
4 |
ஆகத் துமைகேள்வன் அரவச் சடைதாழ
நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்
தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர்
போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே.
|
5 |
கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச
நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்
செல்லும் நெறியானைச் சேர்த்தா ரிடர்தீரச்
சொல்லு மடியார்கள் அறியார் துக்கமே.
|
6 |
எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லா
தங்கை தலைக்கேற்றி ஆளென் றடிநீழல்
தங்கும் மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே.
|
7 |
காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக்கோன்
நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை
ஏம மனத்தாராய் இகழா தெழுந்தொண்டர்
தீப மனத்தார்கள் அறியார் தீயவே.
|
8 |
வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத்
தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த
எண்ணும் அடியார்கட் கில்லை யிடுக்கணே.
|
9 |
பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்
நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
எச்சும் அடியார்கட் கில்லை யிடர்தானே.
|
10 |
தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன்
நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை
வண்ணம் புனைமாலை வைகலேத்துவார்
விண்ணும் நிலனுமாய் விளங்கும புகழாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |