திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.21 திருச்சிவபுரம் - திருவிராகம் பண் - நட்டபாடை |
புவம்வளி கனல்புனல் புவி(*)கலை
யுரைமறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர்
திகழ்தரும் உயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு
பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர்
செழுநில னினில்நிலை பெறுவரே.
(*) கலைபுரை என்றும் பாடம்.
|
1 |
மலைபல வளர்தரு புவியிடை
மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள்
நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகடல் நடுவறி துயிலமர்
அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரம்நினை
பவர்திரு மகளொடு திகழ்வரே.
|
2 |
பழுதில கடல்புடை தழுவிய
படிமுர லியவுல குகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்
குலம்மலி தருமுயி ரவையவை
முழுவதும் அழிவகை நினைவொடு
(*)முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர்
தொழுமவர் புகழ்மிகு முலகிலே.
(*) முதலுருவிய வரனுரைபதி என்றும் பாடம்.
|
3 |
நறைமலி தருமள றொடுமுகை
நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு
நியதமும் வழிபடும் அடியவர்
குறைவில பதமணை தரஅருள்
குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது
நினைபவர் செயமகள் தலைவரே.
|
4 |
சினமலி யறுபகை மிகுபொறி
சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு
தருபொருள் நியதமும் உணர்பவர்
தனதெழி லுருவது கொடுஅடை
தகுபர னுறைவது நகர்மதில்
கனமரு வியசிவ புரம்நினை
பவர்கலை மகள்தர நிகழ்வரே.
|
5 |
சுருதிகள் பலநல முதல்கலை
துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர
வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி
யடைவகை நினையர னுறைபதி
திருவளர் சிவபுரம் நினைபவர்
திகழ்குலன் நிலனிடை நிகழுமே.
|
6 |
கதமிகு கருவுரு வொடு(*)வுகி
ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை
மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய
எழிலரி வழிபட அருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுரம்
நினைபவர் நிலவுவர் படியிலே.
(*)உகிரிடவட என்றும் பாடம்.
|
7 |
அசைவுறு தவமுயல் வினிலயன்
அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை
இருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு
விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுரம் நினைபவர்
செழுநில னினில்நிகழ் வுடையரே.
|
8 |
அடல்மலி படையரி அயனொடும்
அறிவரி யதொரழல் மலிதரு
சுடருரு வொடுநிகழ் தரவவர்
வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுத லமர்கண
துடையுரு வெளிபடு மவன்நகர்
திடமலி பொழிலெழில் சிவபுரம்
நினைபவர் வழிபுவி திகழுமே.
|
9 |
குணமறி வுகள்நிலை யிலபொரு
ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி
மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர
னுறைதரு பதியுல கினில்நல
கணமரு வியசிவ புரம்நினை
பவரெழி லுருவுடை யவர்களே.
|
10 |
திகழ்சிவ புரநகர் மருவிய
சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை
நலமலி யொருபதும் நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு
நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின்
மிகைபுணர் தரநலம் மிகுவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.112 திருச்சிவபுரம் பண் - வியாழக்குறிஞ்சி |
இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கரம் மருவிய சதுரன்நகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே.
|
1 |
அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர்
வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே.
|
2 |
மலைமகள் மறுகிட மதகரியைக்
கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர்
அலைமல்கும் (*)அரிசிலி னதனயலே
சிலைமல்கு மதிலணி சிவபுரமே.
(*) அரிசில் என்பது ஒரு நதி.
|
3 |
மண்புன லனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தன்நகர்
பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச்
செண்பக மலர்பொழிற் சிவபுரமே.
|
4 |
வீறுநன் குடையவள் மேனிபாகங்
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
தேறலுண் டெழுதரு சிவபுரமே.
|
5 |
மாறெதிர் வருதிரி புரமெரித்து
நீறது வாக்கிய நிமலன்நகர்
நாறுடை நடுபவர் உழவரொடுஞ்
சேறுடை வயலணி சிவபுரமே.
|
6 |
ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடு
மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்
பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே.
|
7 |
எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
முபவலி யடக்கிய முதல்வன்நகர்
விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே.
|
8 |
சங்கள வியகையன் சதுர்முகனும்
அங்கள வறிவரி யவன்நகர்தான்
கங்கலும் பறவைகள் கமுகுதொறுஞ்
செங்கனி நுகர்தரு சிவபுரமே.
|
9 |
மண்டையின் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலன்நகர்
பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே.
|
10 |
சிவனுறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்வல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.125 திருச்சிவபுரம் - திருவிராகம் பண் - வியாழக்குறிஞ்சி |
கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே.
|
1 |
படரொளி சடையினன் விடையினன் மதிலவை
சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்
இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே.
|
2 |
வரைதிரி தரவர வகடழ லெழவரு
நுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ்
திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
உரைதரும் அடியவர் உயர்கதி யினரே.
|
3 |
துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு
பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவிய
மணிமிட றனதடி இணைதொழு மவரே.
|
4 |
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென உடையவன் எமையுடை யவனே.
|
5 |
முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்
ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன்
எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி
சதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே.
|
6 |
வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அருவினை யிலரே.
|
7 |
கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன்
உரநெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
பரனென அடியவர் பணிதரு சிவபுர
நகரது புகுதல்நம் உயர்கதி யதுவே.
|
8 |
அன்றிய லுரவுகொள் அரியய னெனுமவர்
சென்றள விடலரி யவனுறை சிவபுரம்
என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே.
|
9 |
புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை
வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம்
இத்தவம் முயல்வறில் இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.
|
10 |
புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை
சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |