|
|
திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும் (மதுரை) - வினாவுரை பண் - நட்டபாடை |
பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றிநின்று
நாடக மாடுநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள்
துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த
ஆடக மாடம் நெருங்குவடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
|
1 |
திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்
செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
நங்கள் மகிழுநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
பொங்கிள மென்முறை யார்களோடும்
புனமயி லாட நிலாமுளைக்கும்
அங்கள கச்சுதை மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
|
2 |
தண்ணறு மத்தமுங் கூவிளமும்
வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்
நண்ணல் அரியநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும்
புகுந்துட னேத்தப் புனையிழையார்
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
|
3 |
பூவினில் வாசம் புனலிற்பொற்பு
புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு
நாவினிற் பாடநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர்விச்சா
தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி
(*)ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
(*) ஆவினில் ஐந்து என்றால் பஞ்சகவ்வியம் என்று பொருள்.
|
4 |
செம்பொன்செய் மாலையும் வாசிகையுந்
திருந்து புகையு மவியும்பாட்டும்
நம்பும்பெ ருமைநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
உம்பரும் நாக ருலகந்தானும்
ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்
அம்புத நால்களால் நீடுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
|
5 |
பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு
பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப்
புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகமு டையவர் சேருங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
|
6 |
கோவண ஆடையும் நீறுப்பூச்சுங்
கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்
நாவணப் பாட்டுநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
பூவண மேனி இளையமாதர்
பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து
ஆவண வீதியில் ஆடுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
|
7 |
இலங்கை யிராவணன் வெற்பெடுக்க
எழில்விர லூன்றி யிசைவிரும்பி
நலம்கொளச் சேர்ந்த நள்ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப்
புந்தியிலு நினைச் சிந்தைசெய்யும்
அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
|
8 |
பணியுடை மாலும் மலரினோனும்
பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகல் அரியநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
மணியொலி சங்கொலி யோடுமற்றை
மாமுர சின்னொலி என்றும்ஓவா
தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
|
9 |
தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ்
சாதியின் நீங்கிய வத்தவத்தர்
நடுக்குற நின்றநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள்விழவும்
இரும்பலி யின்பினோ டெத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
|
10 |
அன்புடை யானை அரனைக்கூடல்
ஆலவாய் மேவிய தென்கொலென்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை
நயம்பெறப் போற்றி நலங்குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
இமையவ ரேத்த இருப்பர்தாமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.94 திருஆலவாய் (மதுரை) - திருவிருக்குக்குறள் பண் - குறிஞ்சி |
நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞாலம் ஆள்வரே.
|
1 |
ஞான மேழுமாம், ஆல வாயிலார்
சீல மேசொலீர், காலன் வீடவே.
|
2 |
ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே.
|
3 |
அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே.
|
4 |
ஆட லேற்றினான், கூட லாலவாய்
பாடி யேமனம், நாடி வாழ்மினே.
|
5 |
அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே.
|
6 |
அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே.
|
7 |
அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே.
|
8 |
அருவன் ஆலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுரவ மோங்குமே.
|
9 |
ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்
தேர மண்செற்ற, வீர னென்பரே.
|
10 |
அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
மேலே செல்க
முன்பக்கம்
|
|
|