திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.133 திருவேகம்பம் (காஞ்சிபுரம்) பண் - மேகராகக் குறிஞ்சி |
வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி
எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே.
|
1 |
வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவந்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.
|
2 |
வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
விண்ணமர் நெடுமாட மோங்கி வியங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.
|
3 |
தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்
மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்
ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே.
|
4 |
தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து
பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ
வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.
|
5 |
சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்
தாகம்பெண் ணொருபா மாக அரவொடு நூலணிந்து
மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்
ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
7 |
வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந்
தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்
சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.
|
8 |
பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான்
அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்
மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வில்வினை மாய்ந்தறுமே.
|
9 |
குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரமூன்றும வெங்கணை ஒன்றி னாலவியக்
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.
|
10 |
ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை
காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |