திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.89 திருஎருக்கத்தம்புலியூர் (இராஜேந்திரப்பட்டினம்)
பண் - குறிஞ்சி
படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
உடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச்
சடையான் எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே.
1
இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்றும் நீறாய் விழவெய்த
சிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயிற்
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே.
2
விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணார் எருக்கத்தம் புலியூ ருறைகின்ற
அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே.
3
அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
திரையார் சடையானைச் சேரத் திருவாமே.
4
வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே.
5
நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப்
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.
6
இப்பதிகத்தின் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்
தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயிற்
தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே.
8
மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.
9
புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
அத்தன் அறவன்றன் அடியே அடைவோமே.
10
ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார்
பாரா ரவரேத்தப் பதிவான் உறைவாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com